பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்புப் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 


ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசினார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் இப்படி பேசுவது சரியானதல்ல என்றும் தெரிவித்து வருகின்றனர். 


பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசியது


"நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உண்டு என்று காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டது. தனிநபர்களின் சொத்துக்கள், நம் பெண்களுக்கு சொந்தமான தங்கம், பழங்குடியின குடும்பங்களுக்குச் சொந்தமான வெள்ளி, அரசு ஊழியர்களின் நிலம் மற்றும் பணம் ஆகியவற்றைக் கண்டறிந்து மறுபங்கீடு செய்ய ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும் சொத்துக்களையும் அரசாங்கம் பறிப்பதை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா?






2006-ல் அபோதைய பிரதமர் மன்மோகன் சிங் தேசத்தின் வளங்கள் மீது முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உண்டு என கூறியிருந்தார். அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைக் கொண்டவர்களுக்கும் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கும் சொத்துக்கள் பகிர்ந்தளிக்கப்படும் என காங்கிரஸ் கூறுகிறது. இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா? என்று பேசியிருந்தார். 


பிரதமர் நரேந்திர மோடி பேசிய பேச்சுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. பிரதமரின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இத்தகைய வெறுப்புப்பேச்சை கண்டிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்,  இந்து, முஸ்லிம் என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கிறதா என்பதை காட்டுங்கள். இல்லாவிட்டால் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள்; பொய்யான தகவலை தெரிவிப்பதை நிறுத்துங்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜுர்ன் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்


பிரதமர் நரேந்திர மோடியின் இத்தையக பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்புப் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாது. கண்டனத்திற்குரியது.  தோல்வி பயத்தில், மக்களின் கோபத்திற்கு அஞ்சி, அவர் மத உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் ஆதாயம் காணலாம் என்று நினைத்து விட்டார் போல. தேர்தலில் தோல்வியை தவிர்ப்பதற்காக வெறுப்பு அரசியலை தேர்வு செய்துள்ளார். வெறுப்பு, பாகுபாடு - இவை இரண்டுமே பிரதமரின் உண்மையான 'guarantees'. இதுவே அவர் அளிக்கும் உத்தரவாதங்கள்.


பிரதமரின் பேச்சு வெறுப்பை விதைக்கிறது என்பது வெளிப்படையாக தெரிந்தும், காது கேளாதது போல தேர்தல் ஆணையமும் நடுநிலமையாக இருக்க தவறிவிட்டது. 


I.N.D.I.A. கூட்டணி  உறுதியளித்த சமூக-பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க தீர்வாக இருக்க முடியும். பிரதமர் அதை திரித்து, சமூக ரீதியாக பின்தங்கிய சமூகங்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் பதவிகளில் உரிய பங்கை வழங்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.


பா.ஜ.க. கட்சியின் வஞ்சகமான திசை திருப்பும் உத்திகள் குறித்து I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரதமர் மோடியின் தோல்வியை வெளிகொண்டு வருவதில் உறுதியுடன் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.