சென்னை


 


தொகுதி மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதோடு, அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார்.  அந்த வகையில், இன்று கொளத்தூர் தொகுதிக்குச் சென்ற முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.


பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்த முதலமைச்சர்:


தீட்டி தோட்டத்தில் ரூ.1.27 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேட்மிண்டன் அரங்கை,  முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது மாணவர்கள் சாலையின் இருபுறமும் நின்று இருந்து கைதட்டி, முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, விளையாட்டு அரங்கை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்த மாணவர்களுடன் சிறிது நேரம் பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தார். அங்கிருந்து வெளியே வரும்போது முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசிய மாணவி ஒருவர், மாணவர்களுக்கு என நீங்கள் பல நல்ல திட்டங்களை தீட்டுவதாக கூறி அதற்கு நன்றி தெரிவித்தார். 


பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கிவைப்பு:


பின்பு, தீட்டிதோட்டம் முதல் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட உள்ள 33 பணிகளை தொடங்கி வைத்தார். கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளை தொடங்கி வைத்ததோடு,  வீனஸ் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியையும் திறந்து வைத்தார். வீனஸ் நகரில் பெருநகர சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்தார்.




நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளியில் ரூ.4.37 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள,  மறுசீரமைப்பு மற்றும் நவீன வசதிகளுடன் ஏற்படுத்தும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.