இன்னொரு பக்கத்தில் திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியும். அந்தப் பிரச்சினைக்குள் செல்ல விரும்பவில்லை. தலையிட வேண்டிய அவசியமும் இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


அதிமுகவில் தலைமை மீதான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இந்த வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பொதுக்குழுக்கூட்டம் நடத்த அனுமதியளித்தார். இதனைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என்று உத்தரவிட்டனர். 


அதேசமயம் பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். ஆனால் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் மாற்றுக்கருத்து இல்லை. மேல்முறையீடு செய்வது குறித்து தலைமை அறிவிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.


இதனிடையே இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஸ்ரீவாரு மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 




பொதுக்குழு கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் வந்த நிலையில், பொதுக்குழு கூடியது. அனைத்துத் தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாகப் பேசினார். அதைத் தொடர்ந்து துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசினார். 


அப்போது அவர் கூறும்போது, ''அனைத்துத் தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டதால்,  ஒற்றைத் தலைமை வரவேண்டும். ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற தீர்மானத்தோடு சேர்த்து எப்போது மீண்டும் பொதுக்குழு கூட்டப்படுகிறதோ, அப்போதுதான் ஏனைய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்''  என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.


சட்டத்துக்குப் புறம்பாக இந்தப் பொதுக்குழு நடத்தப்பட்டு வருவதாக, வைத்திலிங்கம் ஆவேசமாகப் பேசினார். மேடையில் வைத்தியலிங்கம் பேச முயற்சித்த போது மைக் பிடுங்கப்பட்டது. தொடர்ந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டுமென பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி வந்தனர். 


ஒற்றைத் தலைமை கோரிக்கையை அவைத் தலைவர் ஏற்பதாக அறிவித்ததை அடுத்து பொதுக்குழு மேடையில் இருந்து ஓபிஎஸ், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர். 


இதையடுத்து வெளியேறிய அவர்கள் மீது இபிஎஸ் ஆதரவாளர்கள் பாட்டில்களை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது காகிதங்களும் வீசப்பட்டன. ஓபிஎஸ் வந்த பிரச்சார வாகனத்தின் டயர்கள் பஞ்சர் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.




முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன?


இதற்கிடையே வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் இல்ல திருமண விழா இன்று காலை சென்னை, திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். 


அதில் பேசிய அவர், மண மக்களுக்கு வாழ்த்துகள். இன்னொரு பக்கத்தில் திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியும். அந்தப் பிரச்சினைக்குள் செல்ல விரும்பவில்லை. தலையிட வேண்டிய அவசியமும் இல்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயுள்ளனர் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.