கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக சுற்றுச் சுவற்றில் சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக திமுக, பாஜக நிர்வாகிகள் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த சுவற்றில் இருந்த பாஜக சுவர் விளம்பரத்தை அழித்து விட்டு திமுகவினர் சுவர் விளம்பரம் எழுதினர். இது தொடர்பாக மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. 



இதனை தொடர்ந்து கரூரில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் எழுதி இருந்த சுவர் விளம்பரங்களில் பிரதமர் மோடி, அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் பெயிண்ட் ஊற்றி அழிக்கப்பட்டது. இது தொடர்பாகவும் போலீசாரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறிய பாஜகவினர், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் எழுத்தப்பட்டுள்ள திமுக சுவர் விளம்பரத்தை அழிக்க போவதாக தெரிவித்திருந்தனர். 



இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் செந்தில் நாதன் தலைமையில் திரண்டிருந்தனர். அப்போது, போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்க மறுத்த பாஜகவினர் சுவர் விளம்பரத்தை அழிக்க முற்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது கூட்டத்தில் இருந்த இருவர் பெயிண்ட் டப்பாவை எடுத்துக் கொண்டு போய் திமுக சுவர் விளம்பரத்தில் ஊற்றி அழித்தனர். அவர்களை விரட்டிச் சென்ற போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் அவர்களை விடுவிக்குபடி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 



அப்போது அங்கு திரண்டிருந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் அலுவலகத்தில் இருந்து நடந்து சென்று கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தரையில் அமைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் 3 நாட்களுக்கு சம்மந்தப்பட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது திமுக சுவர் விளம்பரம் மீது பெயிண்ட் ஊற்றி அழித்த 2 பேரையும், தனியாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 3 பேரையும் விடுவிக்கும்படி போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், போலீசார் விட மறுக்கவே அனைவரும் கைதாவதாக கூறி அனைவரும் போலீசார் ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் ஏறி கைதாகி சென்றனர். பாஜகவினரின் இந்த திடீர் மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.