வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தப்பணியின்போது முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என சிஜேபி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சொல்லப்போனால் நீட் வினாத்தாள் கசிவின் காரணமாக அப்போது மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி சிஜேபி தீவிரப்போராட்டத்தை முன்னெடுத்து அதில் வெற்றியும் பெற்றது.இந்த வெற்றி தந்த உத்வேகத்தின் காரணமாகவே தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தை சிஜேபி கையில் எடுத்துள்ளது. மேலும், இதன் முழுப்பலனும் சிஜேபிக்கு சென்று விடக்கூடாது என்ற நோக்கில் எதிர்க்கட்சிகளும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
ஆளுங்கட்சிக்கு எதிரான தீவிரப்போராட்டம் - இதுதான் முதல்முறையா?
பொதுவாக சொல்லப்போனால் மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது வழக்கமான ஒன்று இதற்கு எந்த ஆட்சியும் விதிவிலக்கல்ல. ஆனால் எதிர்க்கட்சிகளை கடந்து மாணவர்கள், இளைஞர்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது இதுதான் முதல்முறையா? இந்திய வரலாற்றில் இதற்கு முன் இத்தகைய போராட்டம் நிகழ்ந்ததில்லை என்ற கேள்வி நம்மிடையே எழுவது இயல்புதான். இதற்கான பதிலை அறிய நாம் இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தை அறிய வேண்டிய அவசியமாகிறது.
உடல்நலம் குன்றியபோதும் தீவிர போராட்டம் யார் இந்த ஜே.பி?
சுதந்திர போராட்ட வீரரான ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் 1970-களில் அப்போதைக்கு பிரதமராக இருந்த இந்திரா காந்தியை எதிர்த்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தான் அது. 1974-ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் பணவீக்கம்,வேலையின்மை மற்றும் ஊழலுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள், தங்கள் இயக்கத்திற்கு வழிகாட்டுமாறு ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் வேண்டுகோள் விடுத்தனர். சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், அந்த இயக்கம் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் மற்றும் பீகாரைத் தாண்டியும் விரிவடைய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டார்.
இந்திரா காந்தியின் பிரதமர் பதவிக்கு அச்சுறுத்தல்
ஒரு மாநிலத்தில் மாணவர்களிடமிருந்து தொடங்கிய போராட்டம் பிரதமர் பதவியில் இருந்து இந்திரா காந்தி விலகவேண்டும் என்ற உச்சபட்ச கோரிக்கையை முன்வைத்து அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த இந்திரா காந்தியை சற்றே புருவம் உயர்த்த செய்தது.1971 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இந்திரா காந்தி வெற்றி பெற்றதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்று 1975 ஜூன் 12 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவர் 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடையும் விதிக்கப்பட்டது. இது இந்திரா காந்தியின் பிரதமர் பதவிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி: அரங்கேறிய கைதுகள்!
நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இந்திரா காந்தி பதவி விலகக்கோரி சோசலிசத் தலைவரான ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் மொரார்ஜி தேசாய் ஆகியோர் தலைமையில் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. நீதிமன்ற தீர்ப்பை ஒருபுறத்திலும், போராட்டம் மறுபுறத்திலும் நெருக்கடியை ஏற்படுத்த வேறு வழியின்றி நாட்டில் அவசர நிலையை கொண்டுவந்தார் இந்திரா காந்தி. பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில் ஜூன் 25, 1975 அன்று நாட்டில் நெருக்கடி நிலையை அப்போதைய குடியரசு தலைவர் பக்ருதீன் அலி அகமது பிரகடனப்படுத்தினார். மிசா சட்டம் அமல்படுத்தப்பட்டு நாடு முழுவதும் கைதுகள் அரங்கேறின. கைது செய்யப்பட்டவர்களுள் முக்கியமானோர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், வாஜ்பாய் உள்ளிட்டோர்.
போராட்டம் தீவிரமடையுமா? நீர்த்துப்போகுமா?
1970-களில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மிசா சட்டம் மூலம் ஒடுக்கப்பட்டாலும் அதன் விளைவு 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற டேர்தலில் எதிரொலித்தது. இதே போன்று சிஜேபி மற்றும் எதிர்க்கட்சிகள் நடத்திவரும் தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்து வெற்றி பெறுமா அல்லது நீர்த்துப்போகுமா? இதன் தாக்கம் மக்களிடையே மேலோங்கி 2029 இல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
