தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிவாரண நிதி: முதலமைச்சர் கருத்து:
தற்போது, வெள்ள பாதிப்புகளுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதில் X தளத்தில் தெரிவித்துள்ளதாவது,
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.
ஆனால், மத்திய பா.ஜ.க அரசு, தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து X தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
கொட்டி தீர்த்த மழை:
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மிக மோசமான பாதிப்பைச் சந்தித்தது. சென்னையில் பல இடங்களிலும் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி போட்ட நிலையில், தென் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால், அந்த மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள், பாலங்கள் மிக கடுமையாக சேதம் அடைந்தது. குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்த தண்ணீரால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழ்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை மிக கடுமையாக பாதித்த இந்த புயல் மற்றும் வெள்ளத்தில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 38 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் கேட்டது.
நிவாரண நிதி விடுவித்த மத்திய அரசு:
இந்நிலையில் மத்திய அரசு நிவாரண நிதி விடுவித்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிக்கையில்,தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். ஆனால், மத்திய பா.ஜ.க அரசு, தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.