சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வெப்பசலனம் அதிகரித்த காரணத்தால் மக்கள் குடிநீர் வழங்குவதற்காக அதிமுக சார்பாக மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளை தேர்ந்தெடுத்து தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர், குடிநீர் வழங்கி தாகத்தை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் இதற்கு முன்பாக பலபுயல்கள் வந்துள்ளது. எல்லாம் அரசுகளும் புயல் நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு புள்ளி விவரத்துடன் நிதி கேட்டபோது குறைத்து தான் கொடுப்பார்கள். ஆனால் மத்திய அரசு கேட்ட நிதியை கொடுத்ததே கிடையாது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில இருந்தபோது, திமுக மத்தியில் அங்கம் வகித்த காலங்களிலும் தமிழகத்தில் பேரிடர் காலங்களில் புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டது. அப்போதும் திமுக மத்திய அரசு கேட்ட நிதியை விடுவிக்கவில்லை. குறிப்பாக தற்காலிக நிவாரணம் மற்றும் நிரந்தர நிவாரணம் என இரண்டு வகைகள் உள்ளது. இரண்டு அடிப்படையில் மாநில அரசு மத்தியஅரசிடம் நிதியை கேட்கும்.தற்காலிக நிவாரணம் எஸ்டிஆர்எப் நிதியை எடுத்து


எந்தெந்த நிவாரணத்திற்கு வேண்டுமோ அதற்கு செலவழிக்கலாம். மேலும் நிரந்தர நிவாரணமாக பாலம் உடைந்தது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு என்டிஆர்எஃப் நிதியின் விதிமுறைகளில் வந்தால் நிதி வழங்குவார்கள், இல்லாவிட்டால் வழங்கமாட்டார்கள். ஒவ்வொன்றிற்கும் ஒரு வரைமுறை வைத்துள்ளனர். என்டிஆர்எப் எவ்வளவு தொகை கொடுக்க முடியுமோ அதை மட்டும்தான் கொடுப்பார்கள்.



இந்தியளவில் ஒரே மாதிரி தான் உள்ளது. மாநில அரசு கேட்ட நிதி இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை. மத்திய அரசு கொடுத்த நிவாரணம் சரியாக உள்ளதா என்பது குறித்து அரசாங்கத்திற்கு தான் தெரியும். எங்களிடம் எந்த புள்ளி விவரம் கிடையாது. நிவாரண பணிகளுக்கு எவ்வளவு தொகை வேண்டும் என்று ஒவ்வொரு துறை வாரியாக எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கணக்கிட்டு மத்திய அரசிடம் கேட்பார்கள். அதன் குறித்த புள்ளி விவரங்கள் அவர்களிடம் தான் இருக்கிறது எங்களிடம் இல்லை என்றார். கர்நாடக அரசிற்கு வறட்சிக்காக 3,450 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, வறட்சி வேறு; புயல் வேறு... மாநில பேரிடர் நிவாரண நிதி உள்ளது. அதை எடுத்து செலவு செய்யலாம், அதை செலவு செய்த பிறகு நிதி பற்றவில்லை என்றால் மீண்டும் மத்திய அரசிடம் கேட்கலாம்.விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் மத்திய அரசு மீண்டும் நிதி தரும்.. இவ்வாறு தான் நிதி வழங்கி வருகிறது. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தபோது திமுக அரசு வாதாடி பெறவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்தபோது எத்தனை புயல்கள் வந்தது. அப்பொழுது கேட்ட நிதி மத்திய அரசு கொடுக்கவில்லை. அப்போது சேதம் அதிகம். தற்பொழுது சேதம் குறைவு, மழை மட்டும் தான் பெய்துள்ளது. புயலால் எங்கும் மக்கள் பாதிக்கப்படவில்லை. வெள்ளத்தால் மட்டுமே பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது என்பது அதற்கு தேவையான நிதியை அரசு கேட்டு பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மத்திய அரசு முழுமையான நிதியை விடுவிக்கவில்லை. இது காலங்காலமாக உள்ளது. அதிமுகவுக்கு பொருத்தவரை அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம். தேர்தல் சுமுகமாக நடைபெற்றது. மற்றும் தேர்தல் தொப்பையை சீட்டு குறித்து முழுமையான தீர்ப்பு வழங்கப்படவில்லை தீர்ப்பு வந்தபின் தெரிவிக்கப்படும்.



தமிழகத்தை பொறுத்தவரை கோடை வெப்பம் அதிகரித்தது. வெப்பம் அதிகரித்ததன் காரணமாக மக்கள் இயல்பாக வாக்களிக்க முடியாத சூழல் இருந்தது,இருப்பினும் ஜனநாயக கடமையை தமிழக மக்கள் ஆற்றியுள்ளனர். அதிமுக ஆட்சி காலத்தில் மேட்டூர் அணை தூர்வரப்பட்டது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கிடப்பில் போடப்பட்டது. மேட்டூர் அணை தூர்வாரப்பட வேண்டும். வண்டல் மண் அதிகமாக தேங்கியுள்ளது. மேட்டூர் அணை தூர்வாரப்பட்டால் கூடுதலாக தண்ணீர் தேக்கி வைக்கப்படும். மேலும் அதிமுக ஆட்சி காலத்திற்கு கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த திட்டம் தொடரப்பட்டிருந்தால் மழை காலங்களில் ஏரிகளின் நீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். தற்போது கோடைகாலத்தில் அது பயனுள்ளதாக இருந்திருக்கும். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை நீரேற்று திட்டத்தின் மூலமாக நூறு ஏரிகளில் நிரப்பு இருந்தால், கோடைகாலத்தில் பயனுள்ளதாக இருந்திருக்கும். இதையெல்லாம் திமுக அரசு தவறிவிட்டது. திமுக ஆட்சியில் அனைத்திலும் குறைபாடு உள்ளது. எல்லாம் துறைகளிலும் குறைபாடு உள்ளது. குறைபாடு இல்லாத துறை என்ன உள்ளது என்று கேள்வி எழுப்பினார். மக்கள் குடிநீருக்காக அலைந்து வருகிறார்கள். தண்ணீர் கிடைக்காமல் சாலைமறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.


அரசு ஊழியர்கள் விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். திமுக ஆட்சியில் மாற்றம் வரும் மக்கள் என்று எதிர்பார்த்தார்கள். அதற்கு மாறாக கடுமையாக துன்பத்தையும், வேதனையும் தான் சந்தித்து வருகிறது. மேலும் தேர்தல் முடிந்த பிறகு மத்தியில் உள்ள கட்சிகளுக்கு ஆதரவு குறித்து பதில் சொல்லப்படும் என்றார். தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. போதை பொருள் தடுப்பு பணியில் அரசு தோல்வியுற்றது. தமிழக முழுவதும் கஞ்சா போதை ஆசாமிகள் செய்யும் அட்டூழியமும், ரவுடித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைதொடர்ந்து அரசு கவனத்திற்கு கொண்டு வந்தாலும், இந்த திமுக அரசும் காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை. தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டது.


தற்போது போதைப் பொருட்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும். ஆனால் திமுக அரசு கண்டு கொள்ளவில்லை என்பது வேதனை அளிக்கிறது. திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் எல்லாம் திமுகவாகவே மாறிவிட்டது. திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் திமுகவிலே இணைந்து விட்டது போன்று உள்ளனர். நாட்டில் நடைபெறும் பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள், அரசின் கவனத்திற்கு எடுத்து வைக்கவேண்டும். நல்ல எதிர்க்கட்சி மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து வைத்தால் தான். அரசு கவனமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தும். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள், திமுகவில் இணைந்துவிட்டதால் திமுகவை எதிர்த்து பேச மறுக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.