கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- தாக்குதல்
கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகம்,பிகார், ஹரியாணா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது தாக்குதல் நடைபெற்றுள்ளது. மேலும் சில தனியார் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
சிறுபான்மையினர் மீது தாக்குதல்
இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது! பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - பிரதமர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும்.
வெறுப்பு பேச்சுகள் அதிகரிப்பு
மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.