தமிழக அரசியல் களத்தில் விஜய்
2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை குறிவைத்து களத்தில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியவர், இரண்டு மாநில மாநாட்டை நடத்தி அசத்தினார். அடுத்ததாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் சந்திப்பு நிகழ்சியில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் அளவுக்கு அதிகமான மக்கள் கூடியதால் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக தவெக தலைவர் விஜய்க்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சுமார் 2 மாதங்களுக்கு மேல் வேறு எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார்.
விஜய்யை விமர்சித்த கருணாஸ்
இதனையடுத்து புதுச்சேரியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், அடுத்தாக ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது திரைத்துறையில் உச்சத்தை தூக்கியெறிந்து விட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலில் களம் இறங்கியுள்ளதாக விஜய் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதனை விமர்சிக்கும் வகையில் நடிகர் கருணாஸ் பேசுகையில், 2 லட்சம் கோடி சம்பாதிப்பதற்காக அரசியல் களத்திற்கு விஜய் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கருணாஸ், 200 கோடியை இழந்துவிட்டு மக்களுக்கு சர்வீஸ் பன்னுவதற்காக விஜய் வருவதாக கூறுகிறார். இல்லை இவரே ஒரு சங்கி தான், நல்லா புரிந்து கொள்ளுங்கள். தமிழர்களை பிரித்து ஏதாவது ரூபத்தில் பாஜக தமிழகத்தில் கால் பதிக்க வேண்டும் என நினைக்கிறது. அது சத்தியமாக ஸ்டாலின் இருக்கும் வரை, உதயநிதி ஸ்டாலின் இருக்கும் வரை பாசிச சக்தியை எதிர்க்கும் கடைசி உயிர் உள்ளவரை தமிழகத்தில் கால் ஊண்ட முடியாது. நயினாராக இருக்கட்டும் அவருடைய நைனாவாக இருக்கட்டும். யாராக இருந்தாலும் அதற்கு நாம் வாய்ப்பு கொடுக்க கூடாது.
’2 லட்சம் கோடியை சம்பாதிக்க வரும் விஜய்’
வாழ்க்கையில் யாருக்காவது பாவம் செய்ய வேண்டும் என நினைத்தால் பாஜகவிற்கு ஓட்டு போடுங்கள். பாவம் செய்யனும், நாளை பிறக்கப்போற பிள்ளை கை, கால் பாதிக்கப்படனும் என நினைப்பவர் பாஜகவிற்கு ஓட்டு போடுங்கள். அவ்வளவு பெரிய கொடுமையானவர்கள் பாஜக, இன்று 125 நாட்கள் வேலை தருகிறேன் என கூறி காந்தியின் பெயரை தூக்கிவிட்டார்கள். படர் தாமரை வந்தால் உடல்நிலை மோசமடையும், தாமரை வந்தால் தமிழ்நாடு நாசமாகும். எனவே மக்களுக்கு சேவை செய்யக்கூடிய, மக்கள் நலனுக்காக யோசிக்கிற ஒரு அமைச்சர், முதலமைச்சர் வேண்டும். அப்படி இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் வரவேண்டும் என்பது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகத்தின் விருப்பம்.
இந்த நிலையில், அவர் வருகிறார். இவர் வருகிறார் என கூறுகிறார்கள். எதற்காக வருகிறார். அவர் எந்த சித்தாந்தங்களோடு வருகிறார். எந்த உள்நோக்கத்தோடு வருகிறார், 200 கோடியை இழந்து விட்டு வருகிறார் என்றால், நான் சொல்கிறேன் 2 லட்சம் கோடி சம்பாதிக்க வருகிறார். ஆனால் இங்கு எந்த கோடியும் தேவையில்லை என நினைத்து வாழக்கூடிய, தியாக வாழ்க்கை வாழக்கூடிய மக்களுக்காக வாழ்ந்து வரக்கூடிய முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி வந்தால் தான் நமது உரிமைகள், மாநிலத்தின் பாதுகாப்பு, சுயாட்சி விதிகள் சட்ட விதியாக பாதுகாக்கப்படும் என கருணாஸ் ஆவசேமாக பேசினார்.