புதுச்சேரி: பிரதமர் மோடியின் பெஸ்ட் புதுச்சேரிக்கு எதிராக முதல்வர் ரங்கசாமி செயல்படுகிறார் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுபினருமான சாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
புதுச்சேரியில் புத்தாண்டு முதல் பெட்ரோல், டீசல் விலை ரூ. 2 உயர்ந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான சாமிநாதன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பிற மாநிலங்களை விட பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தபட்சம் ரூ. 5 வித்தியாசமாக இருந்தது. இதனால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளியூர் வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவாக இருப்பதற்காகவே புதுச்சேரியை விரும்பி வருகை தந்தனர்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கேள்விக்குறி
புதுச்சேரி மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூலித் தொழிலாளியாகவும், தனியாரிலும் வேலை செய்துகொண்டு பிரதான வாகனமாக இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அறிவித்துள்ள புத்தாண்டு பரிசான பெட்ரோல் விலை உயர்வால் அவர்களுடைய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும். கடந்த 50 ஆண்டுகள் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சிந்தனை உடைய அரசு தொடர்ந்து அனைத்து தொழிற்சாலைகளையும் மூடியது. பெரிய நிறுவனங்கள் பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தன. புதுச்சேரியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கேள்விக்குறியாக்கி சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வெளி மாநிலத்திற்கு இடம்பெயர்ந்தனர்.
"பெஸ்ட் புதுச்சேரி"
பிரதமர் மோடி"பெஸ்ட் புதுச்சேரி" கனவை முதல்வர் ரங்கசாமி மோசமான புதுச்சேரியாக மாற்றிவிட்டார். இதற்கு வருகின்ற தேர்தல் ஒரு தீர்வாக அமையும். பெட்ரோல், டீசல் உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். வீட்டு வாடகை, மின்சார கட்டணம், குப்பை வரி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வரும் மக்கள் தற்பொழுது பெட்ரோல் வரியின் மூலமாக ஒவ்வொரு மாதமும் ரூ 500 கூடுதலாக செலவழிக்க கூடிய நிலையை உருவாக்கி விட்டனர்.
மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்
மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். புதிய மாற்றத்துக்காக தேர்தலில் மக்கள் வாக்களித்தது தோல்வியில் முடிந்துள்ளது. பெட்ரோல் வரிக்குப் பதிலாக புதுச்சேரியில் மது கடைகளுக்கு கூடுதல் வரி விதிக்காமல், மக்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு வரி போட்டியிருப்பது, சர்வாதிகார போக்கை காட்டுகிறது. பிரதமர் மோடி சொன்ன பெஸ்ட் புதுச்சேரிக்கு எதிராக முதல்வர் ரங்கசாமி செயல்பட்டுக் கொண்டு வருகிறார்.
புயல் நிவாரணமாக ரூ 5 ஆயிரம் அறிவித்து மீண்டும் வரி என்ற பெயரில் பொதுமக்களிடமே வசூல் செய்வதை மக்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதனால் புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, சமீப நாட்களாக பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் லாட்டரி மாட்டின் அவரது மகனை முன்னிறுத்தி நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர். இதனால் வருகின்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது