கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அதிகாரங்களை குவித்துக் கொண்டு ஒற்றை ஆட்சி மூலம் செயல்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சி அமைத்த பிறகும் பா.ஜ.க.வின் மாநில விரோதப் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, எதிர்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் இத்தகைய போக்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.


நிதி வழங்க மறுக்கிறது


இதன் எதிரொலியாக தமிழக அரசின் கல்வித்துறைக்கு 2024-25 ஆம் ஆண்டிற்கு திட்ட அனுமதி வாரியம் ஒதுக்கிய தொகை ரூபாய் 3586 கோடி. இதில் ஒன்றிய அரசின் 60 சதவித பங்கு ரூபாய் 2152 கோடி. மாநில அரசின் 40 சதவிகித பங்கு ரூபாய் 1434 கோடி. இதை நான்கு தவணைகளாக ஒதுக்கப்பட வேண்டும். முதல் தவணை நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இந்த நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் பணியாற்றுகிற ஆசிரியர்கள், பணியாளர்கள் 20,000 பேர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் கல்வியமைச்சர் பலமுறை வலியுறுத்தியும் ஒன்றிய அரசு நிதி வழங்க மறுக்கிறது. 


ஒன்றிய அரசு வலியுறுத்தியதன் அடிப்படையில் பி.எம். பள்ளிகள் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு கல்வித்துறை கையொப்பமிட்டுள்ளது. ஆனால், 2020 தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் சமக்ரா சிக்ஷா அபியான் நிதி ஒதுக்கீட்டை வழங்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. இதனால் மாத ஊதியம் வழங்கப்படாத காரணத்தால் பண்டிகைகளுக்கு செலவு செய்ய முடியாத நிலை, கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை போன்ற பல்வேறு தொல்லைகளுக்கு ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆளாகி வருகிறார்கள. 


அலட்சியப் போக்குடன்...


இந்த மொத்த திட்டத்தில் ஜப்பான் நிறுவனத்திடமிருந்து பெறுகிற கடன் ரூபாய் 33,593 கோடி. இந்தியாவிலேயே மிகப்பெரிய திட்டமாக 119 கி.மீ. நீளத்திலான மெட்ரோ ரயில் திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கையை மாநில மற்றும் ஒன்றிய அரசின் சம பங்களிப்பு அடிப்படையில் 2019 ஜனவரி மாதம் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் திட்ட மதிப்பீடு ரூபாய் 63,246 கோடியாக மதிப்பிடப்பட்டது. ஜப்பான் நாட்டு ஜிகா நிறுவனம் கடன் ஒப்பந்தத்தை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இறுதி செய்ய வேண்டிய சூழலில் காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கில் கடும் நிதி சுமைகளுக்கிடையே தமிழ்நாடு அரசே இம்மாபெரும் திட்டத்தை தமது சொந்த நிதியிலிருந்து நிறைவேற்ற தொடங்கியது. தமிழ்நாடு அரசு பலமுறை கோரியும், பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்டவர்களிடம் வலியுறுத்தியும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காமல் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அலட்சியப் போக்குடன் காலம் தாழ்த்தி வந்தது. 


வெறும் 12 சதவீதம் மட்டும்


சமீபத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்திய பிறகு தற்போது ஒன்றிய அரசின் 12 சதவிகித பங்களிப்பான ரூபாய் 7425 கோடியை வழங்குவதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், கடும் நிதி நெருக்கடிகளுக்கிடையே சென்னை மாநகர மக்களின் போக்குவரத்தை எளிதாக்குவதற்கு இதுவரை தமிழக அரசு ரூபாய் 18524 கோடி செலவு செய்துள்ளது. இதில் தமிழக அரசின் சொந்த நிதி ரூபாய் 11,762 கோடி. வெளிநாட்டு நிதி நிறுவனம் மூலமாக ரூபாய் 6802 கோடி. ஆனால், மெட்ரோ ரயில் திட்ட மொத்த மதிப்பீட்டு தொகையில் வெறும் 12 சதவிகிதத்தை ஒன்றிய அரசு ஒதுக்கியிருக்கிறது. மீதி 88 சதவிகிதத்தை தமிழ்நாடு அரசும், ஜிகா நிதி நிறுவனத்தில் பெறுகிற கடன் மூலமாகத் தான் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். 


பொதுவாக பா.ஜ.க. ஆளும் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கி, பாரபட்சமாக நடந்து கொள்கிற போக்கைத் தான் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இத்தகைய மோடி அரசின் மாநில விரோத போக்கு கூட்டாட்சி முறைக்கு கடும் கேடு விளைவிக்கக் கூடியதாகும். இத்தகைய போக்கை பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து மேற்கொள்ளுமேயானால், ஏற்கனவே தமிழக மக்களின் கடும் சீற்றத்திற்கு ஆளாகியுள்ள பா.ஜ.க.வை மக்கள் வெறுத்து ஒதுக்குகிற நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன் என அந்த அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.