தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் அமைச்சராக பொறுப்பு வகித்தபோது டெண்டர்கள் வழங்கியதில் 500 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
டெண்டர் முறைகேடு, சொத்துக்குவிப்பு:
இதையடுத்து, அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணி மீது வழக்குகள் பதிவு செய்தது. இதையடுத்து, இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
வழக்கு விசாரணை:
இந்த வழக்குகள், கடந்த 8-ந் தேதி நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்எம்டி. டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், காவல்துறை தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, புகார்தாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ, சுரேஷ், எஸ்.பி.வேலுமணி தரப்பில் டெல்லி மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.வி.ராஜூ, சித்தார்த் தவே மற்றும் ஜெ.கருப்பையா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, தமிழக அரசு உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ளதாக எஸ்.பி.வேலுமணி தரப்பு குற்றம்சாட்டியது. அதேசமயம் தமிழக அரசு சார்பில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு என்றும், முந்தைய அ.தி.மு.க. அரசும், லஞ்ச ஒழிப்புத்துறையும் தான் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் வாதிட்டது.
தீர்ப்பு தேதியை அறிவித்த நீதிமன்றம்:
அறப்போர் இயக்கம் சார்பில் இந்த டெண்டர் முறைகேடு ஒதுக்க துணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென்றும், அது கடந்த ஆட்சி காலத்தில் இருந்த அதிகாரிகள் மட்டுமில்லாமல், தற்போதைய மற்றும் எதிர்கால அரசுகளின் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த சூழலில், தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கில் நவம்பர் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
வழக்கை ரத்து செய்ய மறுப்பு:
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம், அவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
அடுத்து என்ன?:
அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியும், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளருமான எஸ்.பி.வேலுமணி, சொத்து குவிப்பு வழக்கிற்கு எதிரான நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, அரசு தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக எஸ்.பி.வேலுமணி மீது லஞ்சஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதுதொடர்பாக எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனையும் செய்தது குறிப்பிடத்தக்கது.