சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகம் போதைப்பொருட்கள் நிறைந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. முதலமைச்சர் மானிய கோரிக்கை புத்தகத்திலையே தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா விற்பனை செய்வதாக 2138 கண்டறியப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட 148 மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிநிலையில் முதலமைச்சர் இடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை குற்றம்சாட்டினர். ஆளும்கட்சியை சார்ந்தவர்கள் இதில் அதிகம் ஈடுபட்டுள்ளார்கள். அதனால் தான் காவல்துறையினரால் கைது செய்யமுடியவில்லை என்று தெரிவித்தார்.



தொடர்ந்து அவர் பேசுகையில், “ராமநாதபுரத்தில் நாட்டுபடகு மூலமாக 350 கோடி மதிப்பீட்டில் போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் திமுக கவுன்சிலர் தொடர்பு இருப்பது தெரியவந்தது. எத்தனை பேர் ஈடுபட்டுள்ளார்கள் என்பது என்ற நடவடிக்கை இல்லை. எனவே தமிழக முதலமைச்சர் பொம்மை முதலமைச்சராக உள்ளார். இந்த சம்பவத்தில் ஆளும் கட்சி சேர்ந்தவர்களே இதில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. திமுக கூட்டத்தில் முதலமைச்சர் பேசும்போது, சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பது குறித்து முதல்வர் ஸ்டாலினே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொலை, கொள்ளை அன்றாட நிகழ்வாக நடைபெற்று வருகிறது.இதனால் மக்கள் கொந்தளித்து வைத்தெரிச்சல் அடைந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் சொல்வதாக முதல்வர் பேசி வருகிறார். தமிழக ஊடகங்களில் வருவதை பார்த்து தான் நாங்கள் சொல்கிறோம்.


எதிர்க்கட்சித் தலைவராக தமிழகத்தின் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து தெரிவித்து வருகிறோம். இதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது முதல்வரின் கடமை. ஆனால் முதல்வர் தனது கடமையை தவிர்த்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கக்கூடியவராக உள்ளார். தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவமனையில் போதிய மருந்து இருப்பு இல்லை, அறிக்கை மூலமாக தெரிவித்தோம். எங்கு மருந்து தட்டுப்பாடு உள்ளது, அங்கு அனுப்புங்கள் என்று நடவடிக்கை எடுத்திருந்தால் சிறப்பான முதலமைச்சராக திகழ்ந்து இருப்பார்.


தனது மகன் நடித்த படத்தை பற்றி பேசிவருகிறார். இதனால் மக்களுக்கு வயிறு எரிச்சல் தான் ஏற்பட்டு வருகிறது. மகனின் திரைப்படம் எப்படி ஓடுகிறது என்பது பற்றிதான் கேட்டு தெரிந்து கொள்கிறார், ஆனால் மக்கள் பிரச்சினை பற்றி கேட்கவில்லை என்பதால் மக்கள் வேதனையில் உள்ளனர். தமிழக அரசு திறமையற்ற அரசாகவும், பொம்மை முதலமைச்சராகவும் இருப்பதால் விலைவாசி உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிறைய திட்டங்களை திமுக ஆட்சியில் கைவிட்டு விட்டனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை சொல்கிறோம். வந்து பாருங்கள்” என முதலமைச்சருக்கு இபிஎஸ் அழைப்பு விடுத்தார்.



மேலும், ”தமிழகத்தில் கல்வியில் மறுமலர்ச்சி அதிமுக ஆட்சியில் தான் என்று பெருமிதம். உயர்கல்வியில் மாணவ மாணவிகள் 52 சதவீதம் பயின்று வருகின்றனர். தமிழகத்தில் தொழிற்சாலையில் அதிக உள்ள மாநிலம் என்று கூறுகிறார். இது அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சியில் எதுவும் கொண்டு வரவில்லை என்ன திட்டம் கொண்டு வந்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக திறந்து வைத்து வருகிறார்கள் என்றும் கூறினார். தமிழக முதல்வருக்கு தகுதித்தெம்பு இருந்தால் எந்த இடத்திற்கு அழைத்தாலும் வருகிறேன். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து கூறுகிறேன். அதேபோன்று திமுக ஆட்சியில் என்ன திட்டங்கள் கொண்டு வந்தீர்கள். அதன்மூலம் மக்கள் என்ன பயனடைந்தார்கள் என்று கூறுங்கள் மக்கள் நடுநிலையாக இருந்து தீர்ப்பு வழங்கட்டும்” என்று விவாதத்திற்கு அழைத்தார்.


மேலும், “அதிமுக ஆட்சியில் இருக்கும்போது ஆன்லைன் ரம்மியை ரத்து செய்ய வேண்டும் என்று தான் ஏற்கனவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்று ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. ஆன்லைன் ரம்மி தடை குறித்து ஆளுநர் சந்தித்து நாங்களும் முறையிட்டு உள்ளோம் என்றார்.தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு குறித்து உரிய ஆய்வு செய்து, அந்தந்த மருத்துவமனைக்கு மருந்துகள் அனுப்பவேண்டும். இதற்கு திமுக நிர்வாகக் குறைபாடே காரணம் எனவும் பேசினார். அதிமுக உள்கட்சி விவகார வழக்கு குறித்த கேள்விக்கு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதுகுறித்து கருத்துக் கூறினால் சரியாக இருக்காது” என்றும் கூறினார்.