வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கடந்த 2015ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமான ரூபாய் 5.53 கோடி சொத்து குவித்ததாக கடந்த மாதம் சி.பி.ஐ. ஆ.ராசா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது,.


இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆ.ராசா, கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், விஜய் சரதாங்கனி ஆகிய நான்கு பேரும் வரும் ஜனவரி 10-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.


சொத்துக்குவிப்பு வழக்கு:


மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்த ஆ.ராசா தற்போது தற்போது நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினராக பொறுப்பு வகிக்கிறார். இவர் மீது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக வருமான வரித்துறை கடந்த 2015ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.


இந்த வழக்கில் ஆ.ராசா மட்டுமின்றி அவரது மனைவி பரமேஸ்வரி, ஆ.ராசாவின் உறவினர் பரமேஷ்குமார், கிருஷ்ணகுமார் உள்பட 16 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, டெல்லி, சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூர் உள்பட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின்போது பல்வேறு முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.


அடுத்தகட்ட நடவடிக்கை:


கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், கடந்த அக்டோபர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அவருக்கு எதிராக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஆ.ராசா வருமானத்தை விட 579 சதவீதம் அதிகளவில் சொத்து சேர்த்ததாக, அதாவது ரூபாய் 5.53 கோடி சொத்துக்கள் சேர்த்தாக கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த வழக்கில் ஆ.ராசா அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.