தமிழக அரசு பாடப்புத்தகங்களில் தலைவர்களுக்கு பின்னால் உள்ள சாதிப் பெயர்களை தற்போது அமைந்திருக்கும் திமுக அரசு நீக்கிவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அரசியல் கட்சியினர் முதல் சமூக வலைதள இயங்குநர்கள் வரை பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை அள்ளிக் குவித்தனர்.


சாதிகளுக்கு அப்பாற்பட்டது திமுக அரசு என்றும், சமூக நீதியை காப்பதில் வலுவாக இருப்பது மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு என்றும் வார்த்தைகளால் வர்ணஜாலம் புரிந்தனர்.  அரசின் இந்த நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஏகபோக வரவேற்பு தெரிவித்து, பாராட்டிய நிலையில், சாதி ஒழிப்பு வரவேற்கத் தக்கதுதான்.ஆனால், அறிஞர்களின் அடையாளங்களை சிதைக்காதீர்கள் என அறிக்கைவிட்டார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் இராமதாசு.






பாடப்புத்தகங்களில் சாதிப் பெயர்களை நீக்கியது திமுக அரசின் மிகப்பெரிய சாதனை எனச் சொல்லி, சமூக வலைதளங்களில் ஒரு பக்கம் கொண்டாடிக்கொண்டிருக்க, இன்னொருப்பக்கம் பக்கம் பக்கமாக பலர் தங்களது ரைட்டப்புகளை எழுதிக் குவித்துக்கொண்டிருந்ததனர். இந்நிலையில்தான், பாடப்புத்தகங்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கியது தற்போதைய திமுக அரசு அல்ல, இதனை செய்து முடித்தது அப்போதைய அதிமுக அரசு என்ற உண்மை மெல்ல எட்டிப் பார்த்தது.






பாடப்புத்தகங்களில் உள்ள இந்த சாதிப் பெயர்களை 2019ஆம் ஆண்டிலேயே அதிமுக அரசு அகற்றியது. இப்படி சாதிப் பெயர்களை அகற்றி 3 ஆண்டுகள் கழித்து திடீரென, திமுக அரசுதான் இதனை செய்ததாக நம்பத் தகுந்த ஒரு தினசரி பத்திரிகையிலேயே செய்தி வர, அந்த பத்திரிகை செய்தி மளமளவென பரவத் தொடங்கியது. இதனையடுத்துதான் திமுக – அரசை சமூக நீதியின் காவலர் என கொண்டாடித் தீர்த்தனர்.






இப்படி பள்ளி குழந்தைகளுக்கு சொல்லித் தரும் பாடப்புத்தகத்தில் சாதிப் பெயர்களை நீக்கியது திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் அல்லது எந்த அரசாக இருந்தாலும் இந்த தமிழ்நாடு இப்படிதான் பாராட்டியிருக்கும். இப்போது, திமுக அரசு பாடப்புத்தகத்தில் சாதிப் பெயர்களை நீக்கிவிட்டது என்று ஒரு தரப்பில் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், இன்னொரு தரப்பில் தலைவர்களின் பெயர்களுக்கு பின்னாள் இருக்கும் சாதி பெயர்களை நீக்குவது அந்த தலைவரின் அடையாளத்தை அழிக்கும் செயல் என குதித்தெழுந்தார்கள்.


அதில் முக்கியமானவர், திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், தற்போதைய தமிழ்நாடு பாடல்நூல் கழகத் தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி.  திமுக அரசு பாடப்புத்தகத்தில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கவில்லையென்றும், இதில் 2019ஆம் ஆண்டிலேயே நீக்கப்பட்டது என்றும் பேட்டிக் கொடுத்ததோடு நில்லாமல், புத்தகத்தில் தலைவர்களுக்கு பின்னால் இடம்பெற்றிருக்கும் சாதிப்பெயர்கள் சரிதான் என்ற ரேஞ்சில் சப்பைக் கட்டு கட்டினார்.


தலைவர்களுக்கு அடையாளமாக விளங்கும் குறிப்பிட்ட சாதிப் பெயர், அந்த சாதியை குறிப்பதை காட்டிலும் தலைவருக்கான அடையாளமாகதான் விளங்குகிறது என்பதோடு, எடுத்துக்காட்டுகளையும் அடுக்கினார். குறிப்பாக, ஜவஹர்லால் நேரு என்பதில் ’நேரு’ என்பது அந்த குடும்பத்தை குறிக்கும் பெயராக இல்லாமல் ‘நேரு’ என்றாலே அது ஜவஹர்லால் என்ற தலைவரைதான் குறிக்கும் என்றும், அதேபோல், பசும்பொன் முத்துராமலிங்கத் ’தேவர்’, இரமாலிங்கம் ‘பிள்ளை’, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் ’பிள்ளை’, எம்.என். ‘நம்பியார்’ என்ற பெயர்களை எல்லாம் குறிப்பிட்டு, இந்த தலைவர்களின் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதிப் பெயர்கள் அந்த தலைவர்களின் அடையாளங்களைதான் குறிக்கிறது எனவும், வெறும் மீனாட்சி சுந்தரம் என்றாலோ முத்துராமலிங்கம் என்று சொன்னாலோ அந்த பெயரில் ஆயிரம் பேர் இருப்பார்கள், பின்னர் தலைவர் யார் ? சாமானியன் யார் என்று எப்படி கண்டுபிடிப்பது என்று சிந்திக்க (?) வைக்கும்  கேள்வியை எழுப்பி, ‘சாதி’ பெயர்களுக்கு சப்போர்ட் செய்து பேசியிருக்கிறார்.


அதோடு, 2019ஆம் ஆண்டில் பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்ட ‘சாதி’ பெயர்கள் தொடர்ந்து நீடிக்கும் என்று கூட சொல்லாமல், தொடர்ந்து நீடிக்குமா அல்லது மீண்டும் சாதி பெயர் சேர்க்கப்படுமா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று பந்தை முதல்வர் பக்கம் திருப்பி அடித்திருக்கிறார் லியோனி.


திமுக சாதிகளுக்கு அப்பாற்பட்டது, சமத்துவத்தையும் சமூக நீதியையும் தனது இரு கண்களாக கொண்ட இயக்கம் என்றெல்லாம் முழங்கிவரும் ஒரு கட்சியில் இருந்துகொண்டே, அதுவும் தமிழ்நாடு பாடல்நூல் கழகத் தலைவராக பதவி வகித்துக்கொண்டே சாதிப்பெயர்களுக்கு வக்காலத்துக் வாங்கிக்கொண்டிருக்கும் திண்டுக்கல் ஐ.லியோனியோல் பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


இதேபோல், தேர்தல் பிரச்சாரத்தின்போது இப்போதெல்லாம் ’பெண்களின் இடுப்பு பேரல் மாதிரி ஆகியிருச்சு’ என பேசிய லியோனிக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், இப்போது சாதிப் பெயர்களுக்கும் சப்போர்ட் செய்து பேசியிருப்பதும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.