தேமுதிக பொருளாளர் பிரேமலதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் "கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நெல்லையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்தால் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ஒரு ஓட்டுக்கு என கேட்டு பணம் வாங்க வேண்டும் என பொதுமக்கள் இடையே பேசியதாக திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார் .
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் இந்த கருத்தை குறிப்பிடவில்லை. பண வலிமையைக் காட்டும் விதமாக, வாக்குக்கு பணம் கொடுப்பபவர்களுக்கு சவால் விடுக்கும் விதமாகவே இதனை தெரிவித்துள்ளார். ஆகவே அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது" என உத்தரவிட்டார்.
கோயிலுக்கு சொந்தமான விவசாய புஞ்சை நிலத்தை உப்பளமாக மாற்ற எடுக்கப்பட்டு வரும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா குளத்தூரைச் சேர்ந்த லிங்கராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் கிராமத்தில் குழந்தை விநாயகர் கோயிலுக்கு சொந்தமாக 49.60 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது. இதன் அருகில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அடையன்குளம் கீழபுத்துகுளம் கண்மாய் உள்ளது. இந்த பகுதியின் குடிநீர் மற்றும் விவசாய பணிகளின் ஒரே நீராதாரமாக இந்த கண்மாய் உள்ளது. கோயிலுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் வகையில் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தனி நபர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
கடந்த 2016-ல் 3 ஆண்டுகளுக்கு விவசாய பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. தற்போது குத்தகை காலம் முடிந்து விட்டது. ஆனால், குத்தகை பெற்ற பலர் விவசாய நிலத்தை உப்பளமாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். கண்மாய்க்கான வரத்து கால்வாய்களை அழித்துள்ளனர். இதனால் , உப்பளத்தின் கழிவு நீர் கண்மாயில் கலந்துள்ளது. இது குறித்து கடந்த 2016லேயே கிராமத்தினர் புகார் அளித்துள்ளனர். கடந்தாண்டு பிப்ரவரி 19ல் வேளாண்மைத்துறை அனுமதியுடன் தான் உப்பளம் செயல்பட்டதாக அறநிலையத்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே , இந்தப்பகுதியில் உப்பள அனுமதிக்கான ஒப்பந்த அறிவிப்பை கோயில் நிர்வாக அதிகாரி வெளியிட்டுள்ளார். கோயிலுக்கு சொந்தமான விவசாய புஞ்சை நிலத்தை உப்பளமாக மாற்றி நடத்த அனுமதித்தது சட்ட விரோதம், கோயில் புஞ்சை நிலத்தில் உப்பளமாக பயன்படுத்த அனுமதித்ததை எதிர்த்து ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவையும் , கோயில் புஞ்சை நிலத்தை உப்பளமாக மாற்றி பயன்படுத்த அனுமதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் . இந்த உத்தரவின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்கத்தடை விதிக்க வேண்டும்." என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யாநாராயணா , வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், பிற வகைப்பாட்டிற்கு மாற்ற வேளாண்மைத்துறைக்கு அதிகாரம் இல்லை. இதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியர், உள்ளூர் திட்டகுழும இயக்குநருக்குத்தான் உள்ளது" என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், கோயில் நிலத்தை உப்பளமாக மாற்றி பயன்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டு, வழக்கு குறித்து கோயில் நிர்வாக அலுவலர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.