சினிமாவுக்கு நடிக்க வரும் ஒவ்வொரு நடிகருக்கும் எம்ஜிஆராக வேண்டும், என்டிஆராக வேண்டும் என்ற ஆசை இருக்கவே செய்கிறது. இங்கே எம்ஜிஆர், என்டிஆர் என்றால் திரையுலக சூப்பர்ஸ்டாராக மாறுவது மட்டுமல்ல, கட்சி ஆரம்பித்து ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சர் நாற்காலியில் அமரவேண்டும் என்பதுதான்.



 



சில நடிகர்களுக்கு அரசியல் ஆசை ஆரம்பத்தில் இருக்காது, போகப்போக வரும், இன்னும் சிலர் நுட்பமாகத் திட்டமிட்டு நாற்காலியை நோக்கி நகர்ந்து வருவார்கள். இதில், நடிகர் விஜயகாந்த் முதல் ரகம். சாதாரண நடிகராக சினிமாவுக்குள் நுழைந்து, வெற்றிகரமான நட்சத்திரமாக மாறி, சரியான நேரம் பார்த்து அரசியலுக்குள் நுழைந்து, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றவர் விஜயகாந்த்.



திமுக ஆதரவாளராகவும் திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவராகவும் அறியப்பட்டு, பின்னாளில் திமுகவையும் கருணாநிதியையும் எதிர்த்தே அரசியல் கட்சி ஆரம்பித்ததும், ஆகப்பெரிய அரசியல் கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைத் தேர்தல் கூட்டணிக்காகக் காத்திருக்கச் செய்ததும், ஐம்பது வயது ஆலமரமான திமுகவையும் தாண்டி பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்ததும் தமிழக அரசியல் வரலாற்றின் வியப்பூட்டும் பக்கங்கள்.



உண்மையில், விஜயகாந்துக்கு முன்பே அரசியலுக்கு வருவார் என்று கணிக்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் தொண்ணூறுகளில் ஆரம்பித்து முப்பதாண்டுகள் முயற்சிகள் செய்து கைவிட்டவர். ஆனால் அரசியலுக்கு வருவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கணிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த், மெல்ல மெல்ல அரசியலுக்கு அடித்தளம் போட்டு, சரியான தருணத்தில் போருக்கு வந்த வீரனாகவே பார்க்கப்படுகிறார்.

 



அதேபோல, தமிழக அரசியல் களத்தின் ஆகப்பெரிய ஆளுமைகளான கருணாநிதியும் ஜெயலலிதாவும் தீவிர அரசியலில் இருக்கும்போதே அரசியல் போர்க்களத்துக்கு வந்து, அவர்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர் என்ற வகையில் விஜயகாந்த் ஏற்படுத்திய தேர்தல் அரசியல் தாக்கம் வியப்பூட்டும் அத்தியாயம்.