‛என் தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர்...’  சொன்னது வேறு யாரும் இல்லை, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வரும், முன்னாள் துணை முதல்வருமாக ஓ.பன்னீர்செல்வம். இது தான் இணையத்தில் கட்சி தலைமையான அவரை எதிர்த்து அதிமுக அடிமண்ட தொண்டர்கள் வரை கடுமையாக விமர்சசிக்க காரணம். எது மாதிரியான விமர்சனம் வந்துள்ளது என்பதை பார்ப்பதற்கு முன் ஓபிஎஸ் பேசிய பேச்சு பற்றி ஒரு பார்வை...


ஓபிஎஸ் பேச்சு இது தான்...


‛‛முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வரவேற்கிறேன். அவரை பற்றிய அனைத்து சிறப்பு அம்சங்களும் நினைவிடத்தில் இடம் பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். கருணாநிதி, பராசக்தி, மனோகரா போன்ற திரைப்படங்களில் அனல் பறக்கும் சீர்த்திருந்த கருத்துக்களை வைத்திருப்பார். என்னை தந்தை தீவிர கருணாநிதி பக்தர். அவரது பெட்டியில் எப்போதும் கருணாநிதியின் பராசக்தி படவசனப்புத்தகம் இருக்கும். அவற்றை அவர் மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரத்தில், நாங்கள் அதை எடுத்து படித்துள்ளோம். வரலாற்றில் கருணாநிதியின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும். எங்களின் எதிர்கட்சி தலைவர்(இபிஎஸ்) மற்றும் அதிமுக உறுப்பினர்கள் சார்பில் இந்த அறிவிப்பை முழுமனதோடு வரவேற்கிறோம்,’’ இது தான் மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை ஆதரித்து ஓபிஎஸ் பேசிய பேச்சு. 




முரண்பட்ட கருத்துக்கள்...


கருணாநிதி இறந்த போது, அவருக்கான இடம் கேட்டு அன்றைய எதிர்கட்சி தலைவராக ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் உதவிகேட்டதும், அதற்கு அவர் மாற்று இடம் தருவதாக கூறியதும், பின்னர் நீதிமன்றம் சென்று மெரினாவில் திமுக இடம் பெற்றதும் நாம் அனைவரும் அறிந்தது. அன்று கருணாநிதியின் அடக்கத்திற்கு தேவையான இடத்தை தர மறுத்த அதிமுக தலைமை, இன்று அதே மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டும் திமுகவின் அறிவிப்பை முழமனதோடு வரவேற்றதோடு, வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என பாராட்டி பேசியிருப்பது, உண்மையில் திமுகவினருக்கே சற்று ஆச்சரியமான ஒன்று தான். இது தொடர்பாக இபிஎஸ் கருத்து தெரிவிக்காத நிலையில், ஓபிஎஸ் தெரிவித்த இந்த கருத்து உண்மையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்தா, அல்லது ஓபிஎஸ்.,யின் தனிப்பட்ட கருத்தா என்பது இதுவரை தெரியாத நிலையில், எப்படி இருந்தாலும் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஓபிஎஸ்.,யின் கருத்து கட்சியின் கருத்தாகவே பார்க்கப்படும். பொதுவாக புகழ்வது என்பது வேறு, ஆதரிப்பது என்பது வேறு. ஓபிஎஸ்.,யின் பேச்சு இதை இரண்டையும் கடந்து, அமோதிப்பதாக அமைந்துவிட்டது. இதை தான் தற்போது அதிமுகவின் தொண்டர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் உள்ள அதிமுகவினர், நேரடியாகவே ஓபிஎஸ்.,யை கடுமையாக சாடி வருகின்றனர். சிலர் ஒருபடி மேலே போய் இ.பி.எஸ்., தலைமையிலான ஒற்றை தலைமை தான் அதிமுகவிற்கு சரி என தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 


 



முதல்நாள், அமைச்சர் துரை முருகனுக்கு பாராட்டு, மறுநாள் கருணாநிதிக்கு பாராட்டு என ஓபிஎஸ்.,யின் பேச்சு அரசியல் நாகரீகம் என ஒரு தரப்பு கூறினாலும், மறுபுறம்... கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் திமுகவின் மோசமான செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய நேரத்தில், அக்கட்சியின் தலைவர்களை புகழ்ந்து கொண்டிருக்கும் ஓபிஎஸ்.,யின் செயல், எது மாதிரியானது என்றும் ஒரு தரப்பினர் சாடுகின்றனர். இபிஎஸ் இதை ஏற்றாரா... அதிமுகவின் மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் இதை ரசித்தார்களா... என்பதெல்லாம் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தெரியவரலாம்.