கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சியில் புதுவைக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி வந்ததை மத்திய அமைச்சர் எல்.முருகனால் நிரூபிக்க முடியுமா? என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.


இதுகுறித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- புதுச்சேரிக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில் புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி வளர்ச்சியில் மோடி அக்கறையோடு உள்ளார். புதுச்சேரியை பெஸ்ட மாநிலமாக மாற்றுகின்ற பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் ஒன்றை மறந்துவிட்டார். 2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தது. 2016-ல் புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 5 ஆண்டுகள் நடைபெற்றது. மத்திய அமைச்சர் கூறும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியதாகும். அதற்கும் பாஜகவுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.




பயிர் காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் கொடுக்கும் திட்டம் ஆகியவை புதுவைக்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களுக்கும் உண்டு. ஆனால், மத்திய அமைச்சர் எல்.முருகன் புதுவைக்கு மட்டும் தனியாக மத்திய அரசு ரூ.3 ஆயிரம் கோடிக்கு சலுகை கொடுத்துள்ளது போல் பேசியுள்ளார். இது முற்றிலும் தவறானது. மத்திய அரசு கடந்த ஓராண்டாக புதுவைக்கு ஒரு பைசா கூட கூடுதலாக நிதி கொடுக்கவில்லை. மத்திய அமைச்சருக்கு நான் சவால் விடுகிறேன். பிரதமர் புதுச்சேரிக்கு ரூ.3 ஆயிரம் கோடி கொடுத்தார் என்பதை அவரால் நிரூபிக்க முடியுமா?. அவர் கூறியது உண்மைக்கு புறம்பானது என்பதை நிரூபிக்க நாங்கள் தயாராக உள்ளோம். புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறதா? அல்லது என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.




அதற்கு காரணம், திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சரை சந்தித்து கூறலாம் அல்லது ஆளுநரிடம் கூறலாம். 2 அமைச்சர்கள் பாஜக தலைவருடன் சென்று ஆளுனரை சந்தித்து திட்டங்கள் வேகமாக நடைபெறவில்லை. எனவே நீங்கள் தலையிட வேண்டும் என்று கூறியுள்ளனர். எனவே அந்த இரு அமைச்சர்களும் முதலமைச்சர் மீது நம்பிக்கை இழந்து விட்டார்களா?. புதுவையில் கடந்த ஓராண்டு கால ஆட்சி என்பது சாதனை ஆட்சி அல்ல. மக்களுக்கு வேதனையான ஆட்சி. வில்லியனூரை சேர்ந்த விஷ்ணுகுமார் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நீதி விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும் அவரை பணீ நீக்கம் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் என்பது உட்கட்சி விவகாரம். அது சம்பந்தமாக எந்த கருத்தையும் கூற மாட்டேன் என அவர் கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண