உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என 2018 ஆம் ஆண்டே அறிவித்தும் தனக்கு கட்சி தலைமை சீட் கொடுக்காததால் மிகுந்த மனவேதனை அடைந்த பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி தேம்பி தேம்பி அழுத காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், அவர் காவல் நிலையத்தில் 67 லட்சம் வாங்கிக்கொண்டு வேட்பாளராக நிறுத்துகிறேன் என்று கூறி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மார்ச் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மிகப் பெரிய சட்டசபை என்பதால் இந்த தேர்தல் பெரும்பாலானோரால் உற்று நோக்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்ளுமா? இல்லையா? என்பது பெரும் எதிர்பார்ப்பாகவே உள்ளது. இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு மத்தியில் மாநில கட்சிகளான சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிடுகின்றன. இவர்கள் ஒவ்வொருவராக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுகிறார்கள். அந்த வகையில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களை தலைவர் மாயாவதி வியாழக்கிழமை வெளியிட்டிருந்தார்.






அதில் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி இம்ரான் மசூதின் சகோதரர் நோமன் மசூத் கங்கோவா சட்டசபை தொகுதியிலும் சல்மான் சயீத் சர்தாவால் தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. சல்மான் சயித் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் சையதுஸ்ஸாமானின் மகனாவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த 12 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை திடீரென சந்தித்தார். பின்னர் காங்கிரஸிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். இதற்கு பிரதிபலனாக சயீத் சர்தாவால் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்தாவால் தொகுதி வேட்பாளர் அறிவிப்பால் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி அர்ஷத் ரானா அதிர்ச்சி அடைந்தார். கட்சி அலுவலகத்திற்குச் சென்ற அவர் பகுஜன் சமாஜ் கட்சி மூத்த நிர்வாகிகளை சந்திக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் மனமுடைந்து அவர் செய்தியாளரிடம் கதறி அழுதார். அந்த வீடியோக்கள் வைரலாக பரவின. அப்படியே நேராக காவல் நிலையம் சென்று தேர்தலுக்காக செலவு செய்த பணத்தை திருப்பி பெற்றுத் தருமாறு புகார் ஒன்றையும் அளித்திருப்பது கட்சியினரிடையே தேர்த்தல் நேரத்தில் பரபரப்பாக்கியுள்ளது.



இதுகுறித்து ரானா செய்தியாளரிடம் கூறுகையில் “நான் இந்த கட்சியில் 24 ஆண்டுகளாக உழைத்து வருகிறேன். உத்தரப்பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் சர்தாவால் தொகுதியின் வேட்பாளர் நான்தான் என 2018ஆம் ஆண்டே முறையாக அறிவிக்கப்பட்டேன். இதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள என்னிடம் 50 லட்சம் ரூபாய் கொடுக்குமாறு கேட்டார்கள். ஏற்கெனவே சர்தாவால் சீட்டுக்காக நான் அவர்களுக்கு 4.5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன். இப்போது எனக்கு பணத்துக்கு பணமும் போய் சீட்டும் போச்சே” என கதறி அழுதார்.


வியாழனன்று அர்ஷத் ராணா, தேர்தலில் போட்டியிடுவேன் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உறுதியளிக்கப்பட்டதில் இருந்து சார்த்தவாலில் கட்சியின் அத்தனை செயல்பாடுகளுக்கும் பொறுப்பாக இருந்து கட்சி செலவுகளை கவனித்ததாக கூறினார். அவர் செலவு செய்த பணத்தைத் திரும்பக் கொடுக்காவிட்டால் தீக்குளிக்கப் போவதாக ராணா மிரட்டினார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சார்தவால் தொகுதியில் தன்னை வேட்பாளராக நிறுத்துவதாக உறுதியளித்து, கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தன்னிடம் ரூ.67 லட்சம் மோசடி செய்ததாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை மாயாவதி தலைமையிலான கட்சி மறுத்துள்ளது. அவர் கட்சியுடன் ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை என்று பிஎஸ்பி கூறியது. “எனக்கு பிரச்சனை பற்றி தெரியாது. அர்ஷத் ராணா பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஒருபோதும் தொடர்புடையவர் அல்ல. அவருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை” என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் சதீஷ் குமார் ரவி தெரிவித்தார்.