சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஞானசேகரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஜய் எழுதிய கடிதம்:
இந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்து போராட்டத்தை இன்று நடத்திய நிலையில், அரசியல் களத்திற்கு புதியதாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய் யாரும் எதிர்பாராத வகையில் இன்று ஆளுநரைச் சந்தித்தார். ஆளுநரைச் சந்தித்தது மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள மாணவிகளுக்கு ஒரு அண்ணனாக தன்னை உருவகப்படுத்தி கடிதம் ஒன்றை தனது கைப்பட எழுதி வெளியிட்டார்.
விஜய் வெளியிட்ட கடிதம் தீயாய் இணையத்தில் பரவி வரும் சூழலில், அவர் எழுதிய கடிதத்தை தவெக தொண்டர்கள் மக்களுக்கு குறிப்பாக கல்லூரி மாணவிகளுக்கு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர். சென்னை பாரிமுனையில் உள்ள கல்லூரி முன்பு விஜய் எழுதிய கடிதத்தை தவெக மகளிரணியினர் விநியோகித்தனர்.
புஸ்ஸி ஆனந்த் கைது:
அப்போது, அவர்களையும் அவர்கள் உடனிருந்த தவெக ஆண் நிர்வாகிகளையும் காவல்துறையினர் அனுமதியின்றி நோட்டீஸ் விநியோகித்ததாக கூறி கைது செய்தனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலும் விஜய் கைப்பட எழுதிய கடிதத்தை தவெக-வினர் தி.நகரில் விநியோகித்தனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஏராளமான தவெக நிர்வாகிகள் மண்டபத்தின் முன்பு குவிந்தனர். போலீசார் அவர்களையும் கைது செய்து பேருந்தில் ஏற்றி வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் வழங்கிய தவெக நிர்வாகிகளும், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் கைது செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
அடுத்தடுத்து பரபரப்பு:
இன்று மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தக்கோரியும், யார் அந்த சார்? என்ற கோஷங்கள் எழுப்பியும் அ.தி.மு.க.வினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில், அரசியல் களத்தில் புதியதாக வருகை தந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினரும் தி.மு.க. அரசுக்கு எதிராக தங்களது காய்களை நகர்த்தத் தொடங்கியிருப்பதால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் முதல்படியாகவே ஆளுநர் சந்திப்பு, புஸ்ஸி ஆனந்த் கைது அரங்கேறியுள்ளது.