அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை வேளைகளில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்யப்பட்டதை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை சார்ந்து 5 முக்கியத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
’’திட்டம் 1:
அரசு பள்ளி 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டிகள் வழங்கப்படும். படிப்படியாக அனைத்து வகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும்.
திட்டம் 2: 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைளுக்கு சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டம்
ஊட்டச்சத்து இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கத்தோடு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பரிசோதித்ததில் பெரும்பாலானோர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக இருந்தனர். வயதுக்கேற்ற உயரமும் எடையும் இல்லை. இதற்கெனத் தனித்திட்டம் தீட்டி, 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைளுக்கு சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டம் செயல்படுத்தப்படும். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
திட்டம் 3: தமிழ்நாடு முழுவதும் தகைசால் பள்ளிகள்
கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி சென்ற நான் அங்குள்ள மாதிரிப் பள்ளிகளைப் பார்வையிட்டேன். டெல்லியில் உள்ளது போல் இனி தமிழ்நாட்டிலும் உருவாக்கப்படும் என்று அறிவித்தேன். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் தகைசால் பள்ளிகள் (School Of Excellence) உருவாக்கப்படும்.
முதற்கட்டமாக ரூ.150 கோடி செலவில் 25 மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக உருவாக்கப்படும். இப்பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சீரமைக்கப்படும். மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கலை, இலக்கியம், இசை, நடனம், செய்முறை அறிவியல், கைவினைச் செயல்பாடுகள், விளையாட்டு என அனைத்து வசதிகளும் உருவாக்கப்படும். இந்தத் திட்டம் படிப்படியாகப் பிற பள்ளிகளுக்கும் விரிவு செய்யப்படும்.
திட்டம் 4: நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்
கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதைப் போன்று, நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் உருவாக்கப்படும். நகர்ப்புற மக்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது கூட்டம் ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை வழங்க மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் உருவாக்கப்படும்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 63 நகராட்சிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் புதிதாக அமைக்கப்படும். இங்கு காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் மருத்துவ சேவைகள் செயல்படுத்தப்படும்.
திட்டம் 5: 234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்
தேர்தலுக்கு முன்னதாக மக்களின் பெறப்பட்ட மனுக்களுக்கு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையின்கீழ் தீர்வு காணப்பட்டன. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
சம்பந்தப்பட்ட தொகுதிகளில் நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து இந்தத் தேவைகளைப் பரிசீலிப்பர். சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மக்களுக்குத் தேவையான, முக்கியமான, 10 திட்டங்களை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைக்க வேண்டும். அவற்றை முன்னுரிமை அடிப்படையில் அரசு சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். நேரடியாக என்னுடைய கண்காணிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். என்னுடைய கொளத்தூர் தொகுதியாக இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவரின் எடப்பாடி தொகுதியாக இருந்தாலும், எதிர்க்கட்சித் துணைத் தலைவரின் போடி தொகுதியாக இருந்தாலும், ஒரே மாதிரியாகத் திட்டங்கள் தீட்டப்படும்’’.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.