சென்னையில் விவாதிக்க இடம் குறியுங்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பொன்முடி அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பிறகு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இன்று (மே 27) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
''எந்த மொழியையும் படிக்க நான் எதிர்ப்பாக இல்லை ஆனால் இரு மொழிக் கொள்கையைத்தான் நாங்கள் ஆதரிக்கிறோம். தேர்வு எழுதுகிறபோது மாணவர்களின் சங்கடங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதம், இந்தி மொழியில் படிப்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுமெனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தமிழுக்கு சலுகைகள் வழங்கப்படவில்லை.
தமிழ் வளர்ச்சிக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு தமிழக முதல்வர் செயல்படுகிறார். மும்மொழிக் கொள்கை பற்றியும் தமிழ் வளர்ச்சிக்கு யார் காரணம் எனவும் நேரிடையாக விவாதிக்க அண்ணாமலை தயாரா என கேட்டிருந்தேன், அதற்கு அவர் தயார் என கூறியுள்ளார். அப்படி விவாதிக்கத் தயார் என்றால் சென்னையில் எந்த இடத்தில் விவாதிக்கலாம்? நானும் தயாராக உள்ளேன்.
ஊட்டியில் துணை வேந்தர்களுக்கு 5ஆம் தேதி கூட்டம் நடைபெற உள்ளதாக வேந்தர் அறிக்கையை அனுப்பி உள்ளார். புதிய கல்வி கொள்கை தொடர்பாகக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கே தெரியாமல் வேந்தர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தமிழ் வளர்ச்சி மீது அக்கறை இருந்தால் அண்ணாமலை ஆளுநரை சந்தித்து ஏன் இணை வேந்தர்களுக்கு அறிவிப்பு வழங்கவில்லை என கேட்க வேண்டும்.
அரசியலில் என்ன நடக்கிறது என்பதை அண்ணாமலை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். எம்எல்ஏ பரந்தாமனுக்கு தெரியாமலேயே பாடப் பிரிவு நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கக் கூடும் என அண்ணாமலை கூறியுள்ளார். அவர் சிண்டிகேட் மெம்பராகவே இல்லை, அவருக்கு எப்படி தெரியும்? அண்ணாமலை அறிக்கை விட்டதால்தான் அண்ணா பல்கlலைக்கழகத்தில் தமிழ் வழி பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது. தெளிவாக தெரிந்துகொண்டு அண்ணாமலை பேச வேண்டும்.
கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சராக ஆகலாம் என கூறியது திராவிட மாடல் ஆட்சிதான். இங்கு இந்தியைப் புகுத்த முற்படுகிறார்கள்.. தமிழ் மொழிக்கு எதிர்ப்பாக அண்ணாமலை பேசுகிறார். சிபிஎஸ்இ பாடப் பிரிவில் ஆங்கிலம் கட்டாயம், தமிழ் மொழி விருப்பப் பாடம் என வைத்துள்ளார்கள். அதில் தமிழ் கட்டாயம் என மத்திய அரசு கொண்டு வர வேண்டும்'' என்று தெரிவித்தார்.