காவல்துறை தடையை மீறி போராட்டம்


 

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் உண்மையை மறைக்க முயல்வதாகவும் கூறி பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி சார்பில் மதுரை முதல் சென்னை வரை பேரணி நடைபெற திட்டமிடப்பட்டது. மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோவிலில் உள்ள கண்ணகி சிலையில் இருந்து பாஜக மகளிரணி மாநில தலைவர் உமாரதி தலைமையில் நடைபெறும் நீதி கேட்பு பேரணியை குஷ்பு துவக்கி வைத்தார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

 

போலீஸ் குவிப்பு


இந்த பேரணி திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடைகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர். பேரணிக்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர பாஜக காவல் ஆணையர் மற்றும் திலகர் திடல் காவல் நிலையத்தில் மனு அளித்த நிலையில் பாஜக பேரணிக்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பாஜக திட்டமிட்டபடி தடையை மீறி  பேரணி நடத்தப்படும் என பாஜக தெரிவித்திருந்தனர். பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் இருநூறுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

 


 

மிளகாய்வற்றலை இடித்து நூதன போராட்டத்தில் ஈடுபடும் பாஜக மகளிரணியினர்








 

கண்ணகி கோவிலான மதுரை சிம்மக்கல் வடக்குபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள செல்லத்தம்மன் திருக்கோவிலில் பாஜக மகளிர் அணி பேரணியை முன்னிட்டு சாந்தநிலையில் உள்ள செல்லத்தம்மன் கோவில் கண்ணகி சிலைக்கு மிளகாய் வற்றலை உரலால் இடித்தனர். சாந்த நிலையில் உள்ள கண்ணகி சிலைக்கு மிளகாய் வற்றல் இடித்து பூசினால் உக்கிர நிலைக்கு வரும் என்பது ஐதீகம் என்பதால் இது போன்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


 

பாஜக மகளிரணி பேரணியில் ஈடுபட முயன்ற பாஜக நிர்வாகி குஷ்பு கீழே விழுந்ததால் பரபரப்பு










 

மதுரை பேரணியின் போது பாஜக நிர்வாகி குஷ்பூ கைது செய்து அழைத்துச் சென்ற போது கீழே தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குஷ்பூவோடு சேர்ந்து பாஜக மகளிர் அணி நிர்வாகிகளும் கீழே விழுந்த நிலையில் அவர்களை கைகொடுத்து எழுப்பிநிற்கவைத்தார்.


 

ஆடுகள் அடைத்துவைக்கப்பட்ட மண்டபத்தில் அடைக்கப்பட்ட பாஜக மகளிரணியினர்










அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்கும் பேரணி சென்ற பாஜக நிர்வாகி, பாஜக மாநில மகளிரணி தலைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிம்மக்கல் பகுதியில் உள்ள ஆயிரம் வீட்டு யாதவ ஆடு வியாபாரிகள் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் ஆடுகள் அடைக்கப்பட்ட பகுதியின் அருகே பாஜக மகளிரணியினரும்  அடைக்கப்பட்டதால் பா.ஜ.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 200க்கும் மேற்பட்ட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன நிலையில் தொடர்ந்து ஆடுகள் சப்தமிட்டு வருவதோடு ஆடுகளின் கழிவுகள் துர்நாற்றம் வீசுவதால் பாஜக நிர்வாகிகள் சிரமம் அடைந்ததாக தெரிவித்தனர்.