தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி திண்டுக்கல் வருகை தந்தார். பின்னர் திண்டுக்கல் வத்தலகுண்டு புறவழிச்சாலை, செட்டி நாயக்கன்பட்டி, ஆர் எம் காலனி, பேகம்பூர், உட்பட பத்து இடங்களில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி ஆண்டாக கொண்டாடி வருகிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உயிர்நாடியாக உறுதுணையாக இருந்தவர் காமராஜர். தமிழகத்திற்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர். கிராமங்கள் தோறும் ஆரம்பப்பள்ளி இருக்க வேண்டும் என நினைத்து அதனை செயல்படுத்தியவர் அவர்.
முதன்முதலாக பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர். இதன் காரணமாகத்தான் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி மேம்படுத்தப்பட்டது. ஆனால், பாஜக இவைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்று எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அனைத்து திட்டங்களும் வடமாநிலங்களுக்கே சென்று கொண்டிருக்கிறது. புதிய ரயில்வே தடங்கள் அனைத்தும் வட மாநிலங்களுக்கே சென்று கொண்டு இருக்கிறது. ஆனால், தமிழகத்திற்கு புதிய ரயில்வே வழித்தடம் கொண்டு வரவில்லை.
அதேபோல் வட மாநிலங்களுக்கு புதிய சாலை திட்டங்கள் ஏராளமாக அமல்படுத்தி வருகின்றனர். ஆனால், தமிழகத்திற்கு புதிய சாலைகள் அமைக்கவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கூறி ஏழு வருடங்கள் ஆகியும் இதுவரை பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. இதோடு ஆரம்பிக்கப்பட்ட மற்ற மருத்துவமனைகள் எல்லாம் வடமாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளிப்படையாக அப்பட்டமாக பாஜக தமிழகத்தை புறக்கணிக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கின்றோம். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பாஜக கட்சியினருக்கு உணர்ச்சிகளே கிடையாது.
தமிழகத்திற்காக எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசிடம் இருந்து வாங்கி வரமுடியவில்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமைச்சர் செந்தில் பாலாஜி மொரிசியஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக அப்பட்டமாக பொய் சொல்கிறார். இதற்கு என்ன ஆதாரம் உள்ளது? வாய் இருக்கிறது என்பதற்காக டெல்லியில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எந்த தலைவர் மீதும் குற்றச்சாட்டு கூற முடியுமா? அதில் நாகரீக பண்பாடு இருக்கின்றதா பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடிக்கடி ஏன் வெளிநாடு பயணம் செய்கிறார். நான் கூறுகிறேன் அவர் சுவிஸ் வங்கியில் பணத்தை முதலீடு செய்வதற்காக செல்கிறார் என குற்றம் சாட்டுகிறேன். ஆகவே, அண்ணாமலை வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். மத்திய அரசில் உள்ள அமைச்சர்களில் அமித்ஷா உட்பட 33 பேர் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். பாஜகவினர் என்ன நேர்மையானவர்களா? அரிச்சந்திரர்களா?
பாஜக எப்படி செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டலாம். திமுக தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி இரண்டு ஆண்டுகளில் மட்டும் 80 சதவீதம் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் எதிர்கட்சிகள் தமிழக அரசு ஒரு திட்டத்தை ஆரம்பிக்கும் பொழுது அதனை பாராட்ட வேண்டும். அதனை தவிர்த்து திட்டம் துவங்கும் முன்னரே குற்றம் குறை கூறக்கூடாது. அரசு கொண்டு வரக்கூடிய திட்டங்களை கொச்சைப்படுத்தக் கூடாது. குறைகள் இருந்தால் அதனை முதல்வர் ஸ்டாலின் நிவர்த்தி செய்வார். பொது சிவில் சட்டத்தை அரசியல் கட்சிகள் மட்டுமல்ல அனைத்து பொதுமக்களும் எதிர்க்கின்றனர். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி எந்த சாதனைகளையும் செய்யவில்லை. சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாது என்பதால் ஜாதியை சொல்லி வாக்குகளை பெற நினைக்கிறார்.
சாதனை வெற்றி பெறவில்லை என்பதால் ஜாதியை கையில் எடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள மக்களை ஜாதி ரீதியாக மதரீதியாக பிரித்தால் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஏதாவது ஒரு தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்து அந்த தரப்பு ஓட்டினை பெற மோடி முயற்சி செய்கிறார். பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவில் நடைமுறை சாத்தியம் அல்ல. இந்தியாவில் ஒரு ஜாதியினர் மட்டுமே ஒரு மதத்தினர் மட்டுமே இருக்கவில்லை பல தரப்பினர் உள்ளனர். பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு ஒத்து வராது இந்தியாவில் நடைமுறைப்படுத்த முடியாது. அதானிக்கு கொடுத்த சலுகைகளை மறக்கடிக்க, அம்பானியை உயர்த்தியதை மறக்கடிக்க, மற்றும் மற்ற விஷயங்களை மறக்கடிக்க வேண்டும் என்பதற்காக பொது சிவில் சட்டத்தை மோடி கையில் எடுத்து உள்ளார் என்றார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் நடை பயணம் செல்வது என்பது குறித்த கேள்விக்கு அழகிரி பதிலளிக்கையில், அண்ணாமலை நடக்கட்டும், உருளட்டும், பொருளட்டும் அது அவரது தனிபட்ட விஷயம் என்றார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். காமராஜர் பிறந்தநாள் அன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு பாடசாலையை ஆரம்பித்துள்ளார் இதனை நாங்கள் வரவேற்கின்றோம்” என்றார்.