கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை, அவரின் அண்ணன் மகனும் மகாராஷ்டிர துணை முதலமைச்சருமான அஜித் பவார் சந்தித்து பேச உள்ளார்.


சரத் பவார், அஜித் பவாருக்கிடையே மோதல் போக்கு:


மகாராஷ்டிர அரசியலில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்டு இரண்டாக உடைந்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள், சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தனர். மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.


அஜித் பவாருடன் அக்கட்சியை சேர்ந்த 8 மூத்த தலைவர்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்ட நிலையில், சரத் பவாருக்கும் அவரின் அண்ணன் மகனுமான அஜித் பவாருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. சரத் பவாரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் அளவுக்கு பிரச்னை வெடித்தது.


வயதை கருத்தில் கொண்டு, தீவிர அரசயிலில் இருந்து சரத் பவார் விலக வேண்டும் என அஜித் பவார் கூறினார். இப்படிப்பட்ட சூழலில்தான், அஜித் பவார், பிரபுல் படேல் உள்ளிட்ட அதிருப்தி தலைவர்கள், சரத் பவாரை சந்தித்து நேற்று பேசினர். 


24 மணி நேரத்தில் இரண்டாவது சந்திப்பு:


இதை தொடர்ந்து, அஜித் பவார் மற்றும் அவரது அணியைச் சேர்ந்த என்சிபி எம்எல்ஏக்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரத் பவாரை சந்திக்க மும்பை ஒய்.பி.சவான் மையத்திற்கு சென்றனர். சரத் ​​பவாரும் இன்னும் சிறிது நேரத்தில் ஒய்பி சவான் மையத்திற்கு செல்ல உள்ளார். முன்னதாக, நேற்று கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய சரத் பவார், "முற்போக்கு அரசியலை தொடருவேன். பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன்" என்றார்.


அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார் சரத் பவார். இந்த சமயத்தில், அவரின் கட்சி பிளவுப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகளின் முயற்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.




மூன்று நாள்களுக்கு முன்புதான், சரத் பவாரின் மனைவி பிரதிபா பவாரை சந்திக்க அவரின் அதிகாரப்பூர்வ இல்லமான சில்வர் ஓக்கிற்கு அஜித் பவார் சென்றிருந்தார். மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் பிரதிபா பவாருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிரதிபா பவாரை சந்திக்க சரத் பவாரின் வீட்டுக்கு அஜித் பவார் சென்றிருந்தார்.


கடந்த 2019ஆம் ஆண்டு, தேசியவாத காங்கிரஸ் கட்சியை அஜித் பவார் உடைத்தபோது, மீண்டும் அவரை கட்சிக்குள் கொண்டு வந்ததில் முக்கிய பங்கை ஆற்றியவர்  பிரதிபா பவார் என்பது குறிப்பிடத்தக்கது.