2021 சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து தமிழக பாஜகவில் அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதாலும் இளைஞர் என்பதாலும் அண்ணாமலையின் பேச்சை கேட்க கூட்டம் கூடியது. அவரும் அரசின் ஊழல் குறித்தும் எதிர்க்கட்சி தலைவர்கள் குறித்தும் வெளிப்படையாக சர்ச்சையான வார்த்தைகளுடன் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். மேலும் தமிழ்நாட்டில் பாஜகவை வெற்றி பெற வைப்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்திருப்பதாகவும் அவர் கூறி வருகிறார். இதனால் சமீபகாலமாக அண்ணாமலையின் நடவடிக்கைகள் பொதுமக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் இடையே அதிருப்தி ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் கூறும் பொழுது, தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே நம்மால் அதை வளர்க்க முடியும், பாஜகவை நான் தனியாக வளர்த்து எடுக்க பாடுபட்டு வருகிறேன். எனக்கு உரிய சுதந்திரத்தை வழங்க வேண்டும் என்றும் பேசியிருந்தார். குறிப்பாக 2019 மக்களவைத் தேர்தலில் தமிழிசை சவுந்திரராஜன் மாநில தலைவராக இருந்தபோது அதிமுக - பாஜக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. எல்.முருகன் தலைவராக இருந்தபோதும் 2021 சட்டசபைத் தேர்தலில் இந்த கூட்டணி தொடர்ந்தது. ஆனால், அண்ணாமலை தலைவரான பிறகு நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது. அதன் தொடர்ச்சியாக பாஜக ஐடி விங் மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணன் உள்ளிட்ட பலரும் கட்சியிலிருந்து பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களை இணைந்து கொண்டனர். அதன் பின்னர் இரு கட்சி தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் சரிமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தனர். இதனால் அதிமுகவுடனான கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு உதாரணாமாக, சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என மேலிடம் முடிவு செய்தால் கட்சி பதவியை ராஜினாமா செய்து விட்டு சாதாரண தொண்டனாகவே தொடர்வேன் என அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியானது. அண்ணாமலையின் இந்த பேச்சு தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கும் விவாதமாக மாறியது. பதிலுக்கு அதிமுக நிர்வாகிகளும் அண்ணாமலையில் இந்த பேச்சு மகிழ்ச்சி அளிப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் அதிமுக பாஜக இடையேயான கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அதேபோல அண்ணாமலை பேசியது அவரது சொந்த கருத்து என பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் செய்தியாளார்களுக்கு அளித்த பேட்டியிலும் தெரிவித்திருந்தார்.
இச்சூழலில் நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் ”எங்கள் நரேந்திரரே தனித்து வா தாமரையை தமிழகத்தில் 40ம் மலரச் செய்வோம்”என மோடிக்கு இணையாக அண்ணாமலையின் புகைப்படத்தை ஒப்பிட்டு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். தேவேந்திரகுல வேளாளர் சங்கம் திருநெல்வேலி சார்பில் இந்த சுவரொட்டிகள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள நிலையில் அதிமுக, பாஜக இடையேயான கூட்டணி மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே கூட்டணி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் உருவாகியுள்ள நிலையில் தேவேந்திர குல வேளாளர் சங்கள் சார்பில் நெல்லையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.