BJP Annamalai: தமிழ்நாடு அரசியலில் இருந்தே அண்ணாமலையை தூக்கவே, அவருக்கு தேசிய அளவில் முக்கிய பதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

தேசிய பொதுச்செயலாளர் அண்ணாமலை?

அதிரடியான அரசியலால் பேசுபொருளாக மாறிய அண்ணாமலை, யாரும் எதிர்பாராத விதமாக பாஜகவின் மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு, சைலண்ட் மோடில் இருந்த அவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆக்கப்பட்டதும் மீண்டும் பொதுவெளியில் தீவிர அரசியலில் ஈடுபட்டார். இந்நிலையில் தான், பிரதமர் மோடி முன்பு வகித்த தேசிய பொதுச்செயலாளர் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும், ஏராளமான பாஜக தலைவர்கள் தற்போதே அண்ணாமலைக்கு வாழ்த்து கூறத்தொடங்கிவிட்டானர்.

அண்ணாமலைக்கு ப்ரமோஷனா? பனிஷ்மெண்டா?

முன்பு மோடி வகித்த பதவி தற்போது அண்ணாமலைக்கு வந்து இருப்பது, அரசியலில் கண்ட மிகப்பெரிய வளர்ச்சி என அவரது ஆதரவாளர்கள் பெருமை பேசி வருகின்றனர். ஆனால், மற்றொரு தரப்போ அதிமுக உடனான கூட்டணியை நிலைக்கச் செய்யவும், அவர் செய்த சில உள்ளடி வேலைகள் காரணமாகவுமே அண்ணாமலைக்கு இந்த பனிஷ்மெண்ட் பதவி வழங்க அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அண்ணாமலை செய்தது என்ன?

அண்ணாமலையின் அடாவடித்தனமான பேச்சு காரணமாகவே ஏற்கனவே பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது. தொடர்ந்து கடுமையாக போராடி மீண்டும் அக்கட்சியை அமித் ஷா கூட்டணிக்குள் கொண்டு வந்தார். இதனை விரும்பாத அண்ணாமலை அதிமுகவை தவிர்க்க பல முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை. அவர் மாநில தலைமை பதவியை வகிப்பதை அதிமுகவும் விரும்பாததன் காரணமாகவே, அண்ணாமலை அதிரடியாக நீக்கப்பட்டார். அதன் பிறகும் கூட, அதிமுக-பாஜக கூட்டணியை கலைக்க அவர் உள்ளடி வேலை பார்த்ததாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதில் ஒன்று தான், ”அதிமுக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால், பாஜக ஒன்றில் போட்டியிட வேண்டும். அதாவது 2:1 என்ற கணக்கில் பாஜக தொகுதிகளை பெறவேண்டும்” என வலியுறுத்தி டெல்லிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியதாக வெளியான தகவல் ஆகும். 

கடுப்பான அமித் ஷா?

அண்ணாமலையின் இத்தகைய நடவடிக்கையால் கடுப்பானதால் தான், அவரை தமிழ்நாட்டு அரசியலில் இருந்தே வெளியேற்ற அமித் ஷா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பலனாகவே, தேசிய பொதுச்செயலாளர் பதவி அண்ணாமலை பெற உள்ளாராம். இதன் மூலம், ஏதேனும் ஒரு மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டு காலப்போக்கில் காணாமல் போக செய்வதே பாஜகவின் கணக்காம். கட்சி வலியுறுத்தியதின் பேரிலேயே அண்ணாமலை ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்பட்டாலும், இன்றைய கூட்டணி கணக்குகளை கருத்தில் கொண்டால் அண்ணாமலையை வெளியேற்றுவதே நல்லது என்ற முடிவுக்கு பாஜக வந்துவிட்டதாம்.

சனாதனம் டாபிக்:

தலைவராக இருந்தபோது திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, சட்ட-ஒழுங்கு தொடர்பான பிரச்னைகளை முன்னிறுத்தியே பேசுவார். ஆனால், அண்மைக்காலங்களாக, அண்ணாமலை சனாதனம் தொடர்பான விவகாரங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கிறார். உதாரணமாக, முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதை குறிப்பிடலாம். இனி தமிழ்நாடு அரசியலில் தனக்கு எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்தே, தேசிய அரசியலில் கலக்க சனாதன விவகாரத்தில் அண்ணாமலை தற்போது அதிக கவனம் செலுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.