பெண்கள் ஓசி பஸ்ஸில் போவதாக திமுக MLA பேசியது பூகம்பமாக வெடித்துள்ளது. பொன்முடி சம்பவத்தை வைத்து திமுக மீது அட்டாக் செய்துள்ளார் நயினார் நாகேந்திரன்.

எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு:

தேனி மாவட்டம் மண்ணூத்து மலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை ஆண்டிப்பட்டி திமுக MLA மகாராஜன் திறந்து வைத்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், உங்கள் ஊருக்கு விரைவில் புதிய தார்சாலை அமைத்து அந்த வழித்தடத்தில் அரசு பஸ் விடப் போகிறோம்.அதில் பெண்கள் ஓசியில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்று கூறினார். ஓசி பஸ் பயணம் என சொல்லியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே பொன்முடி ஓசி பஸ் என சொன்னது சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் திமுக எம்.எல்.ஏ இப்படி சொல்லியிருப்பது எதிர்க்கட்சியினரின் விமர்சன வலையில் சிக்கியுள்ளது.

பொன்முடியை வைத்து சாடல்:

இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் பதிவில், ‘கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை "ஓசி" என்று திமுகவைச் சார்ந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு முன் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியும் இதே போன்று பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை "ஓசி" என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் "ரூ.1000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க" என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்ததும், திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் "அம்மாவுக்கும் ரூ.1000, பொண்ணுக்கும் ரூ.1000" என சபை நாகரிகமன்றி விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

அதிகார மமதை இனியாவது திருந்தட்டும்:

மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், பின் பயனாளிகளை "ஓசி" என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்! ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்துகளை சரிபடுத்துவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதிலோ திமுக தலைவர்கள் காட்டாதது ஏன்? அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும்” என விமர்சித்துள்ளார்.