ஹரியானா மாநிலம் ஹிசார் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான பிரிஜேந்திர சிங் பாஜக கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
பா.ஜ.க. எம்.பி.
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள பிரிஜேந்திர சிங், பாஜக கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சௌத்ரி பிரிஜேந்திர சிங்-ன் மகனாவார். ஹரியானா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் ஆக பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்று, பாஜக கட்சியில் இணைந்தார்.
இதையடுத்து, 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கட்சியிலிருந்து ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி ஆனார். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல், அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும், கட்சி சார்பான வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
காங்கிரஸ் கட்சியில் இணைவு:
இந்நிலையில், பாஜக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் பிரிஜேந்திர சிங். இது குறித்து அவர் தெரிவிக்கையில், அரசியல் அழுத்தம் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, இன்று மதியம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இது பாஜக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளர் பட்டியல்:
ஆளும் கட்சியாக உள்ள பாஜக, மக்களவை தேர்தலுக்கான, 195 தொகுதிக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது. பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதாக பாஜக அறிவித்தது.
முதற்கட்ட பட்டியலான 195 தொகுதியில், உத்தரப் பிரதேசத்தில் 51 இடங்களுக்கும், மேற்கு வங்கத்தில் 20, இடங்களுக்கும், மத்தியப் பிரதேசத்தில் 24 இடங்களுக்கும், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 15 இடங்களுக்கும், கேரளாவில் 12, தெலங்கானாவில் 9, அசாமில் 11, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கரில் தலா 11 இடங்களுக்கும், டெல்லியில் இருந்து 5 இடங்களுக்கும், ஜம்மு காஷ்மீரில் 2 இடங்களுக்கும், உத்தரகாண்டில் 3 இடங்களுக்கும், அருணாச்சல பிரதேசத்தில் 2 இடங்களுக்கும் மற்றும் கோவா, திரிபுரா, அந்தமான் & நிக்கோபார் மற்றும் டையூ & டாமனில் இருந்து தலா ஒரு இடங்களுக்கும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பாஜக எம்.பி ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: Power Pages 7: வரி கட்ட முடியாத நிலை! தோற்கடித்த தி.மு.க.வினரே வருந்தியது – காமராஜரின் அரசியல் களம்