தமிழக அரசியலில் முக்கிய முகங்களாக இருக்கும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய மூவரும் கரூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்களுக்குள் இருக்கும் அரசியல் போட்டி மாவட்டத்தில் தொடர்ந்து பலமாக எதிரொலித்து வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரையும், அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்ட அண்ணாமலையையும் தோற்கடித்து மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் உதயசூரியனை உதிக்கவிட்டு திமுக தலைமையிடம் ஸ்கோர் வாங்கி இருந்தார் செந்தில் பாலாஜி. சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, செந்தில் பாலாஜியை எல்லாம் தூக்கிபோட்டு மிதித்தேன் என்றால் பல்லு எல்லாம் வெளியே வந்துவிடும் என பேசி இருந்தது இருவருக்கும் இடையே இருக்கும் அரசியல் புகைச்சலை மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜியின் செல்வாக்குக்கு செக் வைக்க அதிமுகவும் பாஜகவும் போட்டாபோட்டி போட்டு கொண்டு ஸ்கெட் போட்டு வருகின்றனர். தற்போது இந்த போட்டியில் பாஜக முந்தி உள்ளது. கரூர் மாவட்டத்தின் பாஜக தலைவராக செந்தில் நாதன் என்பவரை நியமித்து அரசியல் விளையாட்டை தொடங்கி உள்ளது பாஜக மாநிலத் தலைமை.
கடந்த முறை அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த செந்தில் பாலாஜி, தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் திமுகவில் ஐக்கியமானார், அதனை தொடர்ந்து நடந்த இடைத் தேர்தலில் திமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் களமிறங்கிய செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டவர்தான் செந்தில்நாதன். அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜியின் அரசியல் க்ராப் அசுரவளர்ச்சிக்கு சென்ற போது அதனை தடுக்கும் விதமாக தம்பிதுரையால் வளர்த்துவிடப்பட்டவர்தான் தற்போதைய கரூர் மாவட்ட பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் நாதன். அதிமுகவின் மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக இருந்த செந்தில் நாதன் பின்னர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் செயலாளராக இருந்து வந்தார். அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் செந்தில் பாலாஜியிடம் செந்தில் நாதன் தோற்ற நிலையில் அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார்.
செந்தில் பாலாஜிக்கும் செந்தில் நாதனுக்கும் ஆரம்பம் முதலே ஏழாம் பொறுத்தமாக இருந்து வந்த நிலையில், திடீரென டெல்லி தலைமை ஒப்புதலுடன் தமிழக பொறுப்பாளர் கர்நாடகா ரவி அவர்கள் தலைமையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு முக்கிய பொறுப்புக்கள் எதிர்பார்த்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் கடந்த ஒரு ஆண்டாக மிகுந்த ஏக்கத்தில் இருந்தனர். தற்பொழுது அந்த ஏக்கத்தை தீர்க்கும் விதமாக செந்தில் நாதனை பாஜக மாவட்ட தலைவராக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்த காலகட்டத்தில் செந்தில்நாதன் மிகவும், சுறுசுறுப்பாகவும் பல்வேறு தரப்பு கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்லும் அரசியல்வாதி ஆகவே வலம்வந்தார். இருந்தாலும் இவரது அரசியல் வளர்ச்சி காரணமாக அப்போதைய அதிமுக மாவட்ட கழக செயலாளர் வி.செந்தில் பாலாஜி அவரை சற்று ஓரம் கட்டி வைத்திருந்தார். நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக, பாஜக கூட்டணி தொடருமானால் கரூரில் அதிக வாக்கு பெற்று கரூர் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளை கைப்பற்ற அதிமுக, மற்றும் பாஜக நிர்வாகிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.