Annamalai: வரும் 20ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. இதை தொடர்ந்து, அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான கள பணிகளை தொடங்கியுள்ள பாஜக, எந்த மாநிலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து வியூகம் அமைத்து வருகிறது. 


தென்னாப்பிரிக்கா செல்லும் அண்ணாமலை


இந்நிலையில், வரும் 20ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஐந்து நாட்கள் பயணமாக அங்கு செல்லும் அண்ணாமலை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் ஆதரவை பாஜக பக்கம் திரட்டும் பொறுப்பு அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், 2வது நாடாக தென்னாப்பிரிக்கா செல்லவுள்ளார்.


கடந்த ஜூன் 23ல் பிரிட்டனில் உள்ள லண்டனுக்கு சென்ற அண்ணாமலை அங்கு தமிழ் மக்களை சந்தித்து பேசினார். இப்போது பாஜக மத்திய தலைமை அவரை தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்ப இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள தமிழர்களிடம் மத்திய அரசின் திட்டங்கள், பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கி பேசவுள்ள அண்ணாமலை, மகாத்மா காந்தி தங்கிய, வாழ்ந்த இடங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். 


பாதயாத்திரையை அறிவித்த அண்ணாமலை:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் விதமாக, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மாநிலம் முழுவதும் வரும் 28ஆம் தேதி பாதயாத்திரை செல்ல உள்ளதாக அறிவித்தார். வரும் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கும் பாதயாத்திரை 110வது நாளில் சென்னையில் நிறைவு செய்ய இருக்கிறது.


6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையின் போது, தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்ற தேர்தல் தொகுதியிலும் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டு, தொகுதி வாரியாக பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது,  தேர்தல் நிதி திரட்டுவது உள்ளிட்ட முக்கிய பணிகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.  இவருடன் நடைபயணம் மேற்கொள்வதற்காக 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.


இந்த பாதயாத்திரை பாஜகவை தமிழகத்தில் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலை பாத யாத்திரையை அமித் ஷா தொடங்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.  வரும் 28ஆம் தேதி ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் ராமேஸ்வரத்தில் இருந்து பாத யாத்திரையை அண்ணாமலை தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக வரும் 20ஆம் தேதி ஐந்து நாட்களாக பயணமாக தென்னாப்பிரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.




மேலும் படிக்க 


Senthil Balaji Case: நிறைவுக்கு வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல்.. உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பு என்னவாக இருக்கும்..