அதிமுகவில் பல மாதங்களாகவே இரட்டை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வந்தது. இந்த பிரச்சனையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். முதலில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுகவில் நிலவிய இரட்டை தலைமை பிரச்னை:
அதேபோல் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் இந்த பொதுக்குழு செல்லும் என வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
இபிஎஸ்க்கு சாதமாக வந்த நீதிமன்ற தீர்ப்புகள்:
இதனை எதிர்த்தும் ஓபிஎஸ் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்த வழக்கிலும் இபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க மட்டுமே தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், ஓபிஎஸ் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பு வெளியானதும் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
இந்த நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சியில் மீண்டும் சேர பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், அத்தகையவர்கள் கழகப் பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்படுபவர்களும்; கழகப் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில் சேருபவர்களும் மட்டுமே, கழக உறுப்பினர்களாகக் கருதப்படுவர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் காலந்தொட்டு இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகவே, கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், மேற்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.