தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக பொறுப்பேற்க இருக்கும் அண்ணாமலைக்கு நேற்று திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் செந்தில்வேல் பேசிய கருத்து சர்ச்சையாகியுள்ளது.
திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் நடந்த வரவேற்பில் அண்ணாமலையை வரவேற்று பேசிய திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல், ’எல்லோரும் எங்களை சங்கி என்கின்றனர்.... ஆமாம்... அமித்ஷா பாரதிய ஜனதா கட்சியின் பெரிய சங்கி. அந்தப் பெரிய சங்கியின் லேட்டஸ்ட் உற்பத்திதான் இந்த சின்ன சங்கி அண்ணாமலை’ எனக் குறிப்பிட்டார். இந்தக் கருத்துதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. மேலும் தொடர்ந்து பேசிய அவர், ’தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட கும்பலிடமிருந்து விடுதலை கிடைக்க அண்ணாமலை முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதுதான் விதி. எனவே திருப்பூருக்கு வருகை தந்துள்ள முன்னாள் காக்கியும், இந்நாள் சங்கியுமான அண்ணாமலை அவர்களை வரவேற்புரை ஆற்ற அழைக்கிறேன் எனப் பேசினார்.
’பாராட்டுறாரா? கிண்டல் செய்யுறாரா?’
செந்தில் வேல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த சக கட்சி உறுப்பினர்கள் அவர் அண்ணாமலையைப் பாராட்டுகிறாரா? அல்லது கிண்டல் செய்கிறாரா? எனக் குழப்பமடைந்தனர். இதனையடுத்து பேசிய அண்ணாமலை, பாரதிய ஜனதாதான் உண்மையான கொள்கையுடைய கட்சி என்றும் பாரதிய ஜனதாவுக்கு மட்டும்தான் நாட்டுபற்று உள்ளது எனவும் இத்தனை நாட்களாக பாரதிய ஜனதா கட்சிக்குத் தமிழ்நாடு தேவைப்பட்டது, இனி தமிழ்நாட்டுக்கு பாரதிய ஜனதா தேவைப்படுகிறது எனவும் பேசினார். மேலும், ‘பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஆட்சி நடத்தும் கட்சி திமுக அதனால்தான் நீட் வேண்டாம், புதிய கல்விக் கொள்கை வேண்டாம் என கூறுகிறார்கள்.மற்றொரு பக்கம் பிரதமர் அனுப்பும் தடுப்பூசிக்கு திமுகவினர்தான் முதலில் டோக்கன் வாங்குகின்றனர். இதனால் சாதாரண பொதுமக்களுக்குத் தடுப்பூசி கிடைப்பதில்லை. தி.மு.க.வினரின் குடும்பத்துக்குத்தான் தடுப்பூசி செல்கிறது. இதனை மறைக்கவே தடுப்பூசி கிடைக்கவில்லை என்கின்றனர். மற்றவர்கள் குடும்பத்துக்காகக் கட்சி நடத்துகின்றனர் ஆனால் இது உண்மையான தொண்டர்களை உடைய கட்சி’ என்றார்.
மேலும், ‘மத்திய அரசின் திட்டத்தில் அதிகம் பயனடைந்த ஊர் திருப்பூர். முத்ரா திட்டத்தின் கீழ் பயன்பெற்று திருப்பூர் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இனியும் நாம் பொறுக்க முடியாது. ஆட்சிக்கு வந்தாக வேண்டும், நமது நல்ல கொள்கைகளையும், பிரதமரின் திட்டத்தையும் வீடு வீடாக கொண்டு சேர்க்க முழுமூச்சாகச் செயல்படுவோம்.மக்களுக்கு பிரதமர் மீது மிகப்பெறும் மரியாதை உள்ளது. அதிரடியாகவும் அசுரத்தனமாகவும் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் வளர்ச்சி பெறும்.தமிழ்நாட்டை மாற்றி காட்டுவோம்’ எனப் பேசினார்.
Also Read: சிறுமி மித்ரா பிரச்னை தீர்ந்தது; மருந்துக்கான இறக்குமதி வரி ரத்து செய்தது மத்திய அரசு!