பாஜகவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் திமுகவினர் கொடி கம்பம் மற்றும் சுவர் விளம்பரங்களை சேதப்படுத்திய பாஜகவினர் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

 

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் திமுக மேற்கு ஒன்றிய அலுவலகத்தின் பெயர் பலகையை கற்கள் வீசி, மர்ம நபர்கள் நள்ளிரவில் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், அவ்வலுவலகத்தின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் இருந்த கட்சிக் கொடியை கீழே இறக்கி, அவற்றை கிழித்து சாலையில் போட்டுள்ளனர். மேலும், சேலம் பை - பாஸ் சாலையில் மேம்பாலத்திற்கு அடியில் சுவற்றில் வரையப்பட்டிருந்த கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் படங்களில் சாணி வீசி விட்டு, மர்ம நபர்கள் சென்று விட்டனர். இது தொடர்பாக திமுக கட்சி பொறுப்பாளர்கள் மர்ம நபர்களை அடையாளம் கண்டு வேலாயுதம்பாளையம் போலீசில் தகவல் தெரிவித்தனர்.

 

அப்போது பாலத்துறை அருகே டீக்கடை முன்பு, இரு சக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தவர்களை, வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் வேலாயுதம்பாளையம் காந்தி நகரை சார்ந்த பிரதீப், அண்ணா நகரை சார்ந்த சுகுந்தன் என்பது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், அவர்கள் மூன்று பேர் பாஜக மற்றும் இந்து முன்னணி உறுப்பினர்கள் என்று கூறப்படுகிறது.

 

இந்நிலையில், இது தொடர்பான தகவல் திமுகவினரிடையே பரவ ஆரம்பித்தது. இன்று அதிகாலை முதலே மேம்பாலம் அருகில் திரள ஆரம்பித்தனர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்ட நிலையில் பாஜகவை கண்டித்தும், புகழூர் பாஜக நிர்வாகிகளை கண்டித்தும், அண்ணாமலையை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். திமுகவினரின் இந்த திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.