அதிமுகவை அதன் கூட்டணி கட்சியான பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சி.டி.ஆர்.நிர்மல் குமார் ராஜினாமா


பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார் நேற்றைய தினம் அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த புகைப்படங்கள் பாஜக வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தின. பாஜகவில் இருந்து விலகிய சி.டி.ஆர்.நிர்மல் குமார், ’’பல சங்கடங்களைக் கடந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்சியில் பயணித்தேன். உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்’’ எனவும் தெரிவித்திருந்தார். 


அதுமட்டுமல்லாமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாகவும் விமர்சித்திருந்தார். இதனிடையே இன்றைய தினம் தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை. ஆனால்  பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்?'' என சரமாரியாக கேள்வி எழுப்பினார். 


அமர் பிரசாத் ரெட்டி ட்வீட்


இப்படி அடுத்தடுத்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி வருவது அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவரான அமர் பிரசாத் ரெட்டி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ அதிமுக கூட்டணி கட்சியாக இருந்துக் கொண்டு இதை செய்திருக்க கூடாது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை!” என தெரிவித்துள்ளார். 


மேலும், “நாலாண்டு காலம் 420களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?” எனவும் சரமாரியாக  கேள்வியெழுப்பியுள்ளார்.


“கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என சொல்லிக் கொண்ட அதிமுகவினருக்கு வாக்காளர்கள் தக்க பாடத்தை புகட்டியுள்ளனர். 66000 வித்தியாசத்தில் தோற்றது மீள்வதற்கான அறிகுறி இல்லை. கோட்டையை பிடிப்பதை மறந்து விடுங்கள். தமிழகத்தின் ஒரே எதிர்காலம் பாஜகதான். தமிழகத்தில் பாஜக  அண்ணாமலை தலைமையில் ஆட்சியமைக்கும்" என அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். 


முன்னதாக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் பாஜகவை பலவீனப்படுத்திவிடலாம், தங்கள் கட்சியை பலப்படுத்திவிடலாம், எங்கள் மாநில தலைவருக்கு களங்கம் ஏற்படுத்தி விடலாம் என்று நினைத்து செயல்பட்டால், எங்களுக்கும் எல்லாம் தெரியும் நாங்களும் உங்களைபோல் செயல்பட்டால் உங்கள் நிலை என்ன?” என அதிமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.