கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. இந்த சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி ஒன்று முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.


தனியார் துறையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என மத்திய இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் பேசுகையில், "தனியார் துறையில் அவுட்சோர்சிங் மூலம் குரூப் 4 பதவிகளில் செய்யப்படும் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை.


ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு குரூப் 4 வேலைகள் கிடைத்து வந்தன. ஆனால், தற்போது இந்தப் பணியிடங்களுக்கு அவுட்சோர்சிங் மூலம் ஆட்சேர்ப்பு செய்யும்போது, ​​இடஒதுக்கீடு சட்டம் பின்பற்றப்படுவதில்லை. தனியார் துறையில் அவுட்சோர்சிங் மூலம் குரூப் 4 பணி நியமனங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என எங்கள் கட்சி விரும்புகிறது" என்றார்.


மாநில பாஜக அரசால் இயற்றப்பட்ட உத்தரப்பிரதேசம் நசுல் சொத்து மசோதா, 2024 குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர், "இது ஏற்கனவே மாநிலங்களவையால் தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த கமிட்டி அதை பரிசீலித்து பரிந்துரை செய்யும். இது தேவையற்றது என்றும் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது என்றும் எங்கள் கட்சி கருதுகிறது" என்றார்.


பாஜக கூட்டணியில் குழப்பம்: ஒடுக்கப்பட்ட வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் வகையில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. இந்தியா மட்டும் இன்றி அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது.


இந்தியாவை பொறுத்தவரையில் சாதியின் அடிப்படையில் இங்கு பாகுபாடு காட்டப்பட்டது என்றால், அமெரிக்க போன்ற நாடுகளில் நிறத்தின் அடிப்படையில் இனத்தின் அடிப்படையில் மக்கள் ஒடுக்கப்பட்டனர். இந்தியாவில் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளிலும் கல்வி நிலையங்களிலும் 63.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.


பட்டியல் சமூகத்தவருக்கு 15 சதவிகிதமும் பழங்குடிகளுக்கு 7.5 சதவிகிதமும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதை தவிர, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகிதமும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவிகிதமும் வழங்கப்பட்டு வருகிறது.


அரசின் வேலைவாய்ப்புகளிலேயே இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.