ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு ஆளுநர் ஆர். என்.ரவியை நாளை (டிச.01) சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்திக்கிறார்.


ஆளுநர் சட்டத்துறை அமைச்சர் சந்திப்பு


ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அக்.28ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தும் வகையில் ஆளுநரை நாளை அமைச்சர் ரகுபதி சந்திக்கிறார்.


தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை முன்னதாக ஒப்புதல் அளித்தது. ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று விரைவில் அவசர சட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.


ஏற்கெனவே கடந்த அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, வல்லுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு, புதிய சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.


முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்


இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்  நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, பொதுத்துறை செயலர் ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடுப்பதற்கான அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைன் ரம்மி என்ற பெயரில் நடைபெறும் சூதாட்டங்களில் பணத்தை பறிகொடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் தொடர் கதையாகி வருகின்றன. குறிப்பாக இளம் தலைமுறையினர் தான் ஆன்லைன் ரம்மியால் விபரீத முடிவை நாடுகின்றனர்.



முன்னதாக ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுநரிடம் பாஜகவின் நிலைப்பாட்டை தெரிவித்து இருப்பதாகவும், அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த போதிலும் சூதாட்டத்தை தமிழ்நாடு அரசு தடை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டையும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைத்தார்.


சரியான சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதே ஆளுநரின் பணி எனவும், ஆளுநர் ஒப்புதல் அளித்த அவசரச் சட்டத்துக்கு அரசாணையைக் கூட தமிழ்நாடு அரசு பிறப்பிக்கவில்லை எனவும் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.


சட்டத்தின் மீதான சில சந்தேகங்கள் குறித்து தமிழ்நாடு மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.


மேலும் படிக்க: Marriage Bill : இது வரலாறு.. 'லவ் இஸ் லவ்'...அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட தன்பாலின திருமண மசோதா..