Bihar NDA Seat Sharing: பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவின் தொகுதி பங்கீடு வெளியாகியுள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தல் 2025:
பீகாரில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் பீகாரில் எப்போது தேர்தல் என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த சூழலில் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (அக்டோபர் 6) அறிவித்தது. அதன்படி, வரும் நவம்பர் 6 ஆம் தேதி மற்றும் 11 ஆகிய தேதிகள் பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பீகாரில் தற்போது ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் எப்படியும் இந்த முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் முனைப்பு காட்டி வருகிறது ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணி. இச்சூழலில் தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டணி பங்கீடு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
என்.டி.ஏ கூட்டணி தொகுதி பங்கீடு முடிவு:
அதாவது , பாஜகவும் ஜேடியுவும் சம எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடத் தயாராகி வருவதாகவும், மொத்தம் 205 இடங்கள் இரண்டு கட்சிகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டது. இச்சூழலில் தான் இன்று(அக்டோபர் 12) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து முடிவு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பாரதீய ஜனதா கட்சி 101 தொகுதிகள் போட்டியிட உள்ளது. அதேபோல், ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (LJP) (R) (ராம்விலாஸ் பாஸ்வான்) 29 தொகுதிகளிலும், உபேந்திரா குஷ்வேகா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (Rashtriya Lok Morcha ) மற்றும் ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான (Hindustani Awam Morcha (Secular) ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தலா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.