Bihar Elections 2025: பீகார் தேர்தலில் நிதிஷகுமார் தலைமையிலான பாஜக கூட்டணிக்கும், தேஜஸ்வி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
பீகார் சட்டமன்ற தேர்தல்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பீகார் சட்டமன்ற தேர்தலில், நம்பர் 6 மற்றும் 11 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் முடிவுகள் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, அரசியல் கட்சிகள் பல மாதங்களுக்கு முன்பிலிருந்தே, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக ஆளும் நிதிஷ் குமார் மற்றும் பாஜக கூட்டணிக்கும், பிரதான எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே களத்தில் நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பீகார் மாநில தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போகும் முக்கிய காரணங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
பீகார் தேர்தல் - வெற்றியை தீர்மானிக்கும் 5 காரணிகள்:
1. முன்னிலையில் பாஜக கூட்டணி
அரசியல் கணக்குகள் அடிப்படையில் பார்த்தால் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு தற்போதைய சூழல் சாதகமாக உள்ளது. பாஜக, ஜேடியு, சிராக் பாஸ்வான் மற்றும் உபேந்திர குஷ்வாஹா என மக்களால் நன்கு அறியப்பட்ட பல தலைவர்களை ஆளும் கட்சியின் கூட்டணி கொண்டிருக்கிறது. இது ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை உள்ளடக்கிய எதிர்க்கட்சி கூட்டணியை காட்டிலும் வலுவானதாக உள்ளன.
2. கள சூழல்
அரசியல் கணக்குகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக இருருப்பதாக கூறப்பட்டாலும், களத்தில் உள்ள அரசியல் சூழல்கள் இந்த தேர்தலை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சராக மக்கள் விரும்புவதாக கூறுகின்றன. அதேநேரம், ஆர்ஜேடியின் பாரம்பரிய முஸ்லிம்-யாதவ் வாக்குத் தளத்தைத் தாண்டி தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது என்பது தேஜஸ்வி யாதவின் முன்பு உள்ள மிகப்பெரிய சவலாக கருதப்படுகிறது.
3. நிதிஷ் குமாரின் தாக்கம்:
முதலமைச்சர் நிதிஷ் குமார் 20 ஆண்டுகளாக ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை எதிராக களமாடி வருகிறார். மேலும் சமீபத்திய ஆண்டுகளில் கடும் விமர்சனங்களையும், அதிக அளவில் மதிப்பை இழந்த தலைவராகவும் பார்க்கப்படுகிறார். ஜேடியு கட்சியின் சொத்து மற்றும் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான பொறுப்பு என இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் தோராயமாக 15% வாக்குகளைப் பெறுவதால் கட்சியின் சொத்து எனவும், ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் முகம் என்பதால் அதற்கான பொறுப்பாகவும் திகழ்கிறார். எனவே, முக்கிய கேள்வி என்னவென்றால், தொடர்ந்து வீழ்ச்சியில் இருக்கும் நிதிஷ்குமார், பாஜகவின் ஆதரவுடன் தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா? என்பதே ஆகும்.
4. நலத்திட்டங்கள் Vs ஆட்சிக்கு எதிரான போக்கு
வாக்காளர்களின் எதிர்ப்பை சமாளிக்க, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமீபத்திய மாதங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து நேரடி பணப்பலன் திட்டங்களை வாரி வழங்கியுள்ளன. வாக்காளர்களின் கைகளில் நேரடியாக பணத்தை வழங்கும் இந்த உத்தி மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களிலும் பாஜக் கூட்டணிக்கு பயனளித்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நேரடி நலத்திட்டங்கள் பாரம்பரிய சாதி வாக்கு கணக்கீடுகளை குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன, மேலும் பீகாரில் ஆட்சிக்கு எதிரான போக்கை சமாளிக்க ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கலாம். இதுபோக, பாஜக தலைமையிலான மத்திய கூட்டணி ஆட்சியில் முக்கிய பங்கு வகிப்பதால், நிதிஷ்குமார் பீகார் மாநில உட்கட்டமைப்புக்கு அண்மையில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
5. கேம் சேஞ்சர் பிரசாந்த் கிஷோர்?
இறுதியான மற்றும் மிகவும் கணிக்க முடியாத அம்சம் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் வருகை. அவரது தீர்க்கமான பரப்புரை pஅல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், உண்மையான சோதனை அந்த கவனத்தை வாக்குகளாக மாற்றுவதாகும். அவரது கட்சி 10 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடிந்தால், போட்டி பரவலாக இருக்கும். 2020 தேர்தல் வெறும் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தீர்மானிக்கப்பட்டதால், கிஷோரின் ஒரு சிறிய தாக்க கூட இரண்டு பெரிய கூட்டணிகளுக்கும் ஆட்டத்தை காண்பித்து இறுத்இ முடிவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
நிஜத்தில் நிதிஷ் Vs தேஜஸ்வி, நிழலில் மோடி Vs ராகுல்
வெளிப்படையாக பார்த்தால் இது நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையேயான, நேரடி போட்டியை கொண்ட ஒரு மாநில சட்டமன்ற தேர்தலாகவே கருதப்படுகிறது. ஆனால், ஆழ்ந்து பார்த்தால் தேசிய அளவில் மோடி மற்றும் ராகுலுக்கு இடையே நிலவும் முக்கியமான தேர்தல் களம் இதுவாகும். 10 ஆண்டுகளாக இருந்த தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக இன்று, கூட்டணி மூலம் ஆட்சியில் இருந்த பீகார் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கு இருக்கும் 40 மக்களவை தொகுதிகள் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே அந்த மாநிலத்தில் தங்களுக்கு சாதகமான அரசியல் சூழலை ஏற்படுத்த பாஜக மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளும் முட்டிமோதுகின்றன.