BHAICHUNG BHUTIA: கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடந்த அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. 


சிக்கிமை பொறுத்தவரையில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. பிரேம் சிங் தமாங் தலைமையிலான SKM 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.


சிக்கிமில் நடந்தது என்ன? மாநிலத்தில் மொத்தம் 32 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக 31 தொகுதிகளிலும் போட்டியிட்ட போதிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. 12 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கும் தோல்வியே மிஞ்சி இருக்கிறது.


வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரையில், 58.29 சதவிகித வாக்குகளை ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா பெற்றுள்ளது. சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு 27.41 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளது. பாஜகவுக்கு 5.19 சதவிகித வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு 0.31 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன.


இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. நோட்டாவுக்கு 0.99 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன.


தொடர் தோல்வியை சந்தித்த பைச்சுங் பூட்டியா: ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ள பர்ஃபங் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அங்கு போட்டியிட்ட இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான பைச்சுங் பூட்டியா தோல்வியை சந்தித்துள்ளார்.


8,358 வாக்குகளை பெற்ற சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவை சேர்ந்த ரிக்சல் டோர்ஜி பூட்டியா வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடம் பிடித்த பைச்சுங் பூட்டியா 4,012 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். கடந்தாண்டுதான், சிக்கிம் ஜனநாயக முன்னணியில் பைச்சுங் பூட்டியா இணைந்தார். 


கடந்த 2018 ஆம் ஆண்டு, ஹம்ரோ சிக்கிம் கட்சியை (HSP) தொடங்கிய பைச்சுங் பூட்டியா, 2019 சட்டப்பேரவை தேர்தலில் களம் கண்டார். கட்சியின் முகமாக அவர் பார்க்கப்பட்டாலும், பெரிய தலைவர்கள் யாரும் இல்லாததால் ஒரு இடத்தில் கூட அவரது கட்சி வெற்றிபெறவில்லை.


கடந்த தேர்தலில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுக்கு பைச்சுங் பூட்டியா ஆதரவு தெரிவித்தார். 2019 தேர்தலுக்கு முன்னதாக முதலமைச்சர் பிரேம் சிங் கோலேவை சந்தித்து பேசினார். அதன் பின்னர், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுக்கு எதிராக தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து 6ஆவது முறையாக தோல்வி அடைந்துள்ளார். முதலில் மேற்குவங்கம் மாநிலத்தில் இரண்டு முறை போட்டியிட்டார். கடந்த 2014 மக்களவை தேர்தலில் டார்ஜிலிங் தொகுதியிலும் 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சிலிகுரி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 


மக்களவை தேர்தலுடன் நடைபெற்றிருந்தாலும் அதன் பதவிக்காலம் நிறைவு பெற உள்ளதால் அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.