மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று ( ஜூன் 29 ) கடிதம் எழுதியுள்ளார். மருத்துவ படிப்புகளில் தற்போதைய தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்து, முந்தைய தேர்வு முறையை மாநில அரசு மீண்டும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மம்தா பானர்ஜி கடிதம்:
பிரதமர் மோடிக்கு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டதாவது, இந்த தேர்வானது பெரும் ஊழலுக்கு வழிவகுத்திருக்கிறது.
வினாத்தாள் கசிவு, குறிப்பிட்ட நபர்கள் மற்றும் தேர்வு நடத்தும் அதிகாரிகளால் லஞ்சம் வாங்குதல், குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு வசதியாக ஏற்பாடுகள் மற்றும் கருணை மதிப்பெண்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இது குறித்து பாரபட்சமற்ற விசாரணை தேவை. இத்தகைய நிகழ்வுகள், இவற்றில் சேர்க்கை பெறுவதை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களை பாதிக்கிறது. மேலும், முந்தைய தேர்வு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறும், மாநிலங்களின் அதிகாரத்திலேயே விட்டுவிட வேண்டும் என்றும் பிரதமர் மோடியை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.
2017 க்கு முன்பு, மாநிலங்கள் தங்கள் சொந்த நுழைவுத் தேர்வுகளை நடத்த அனுமதிக்கப்பட்டனர், சில மருத்துவ படிப்புகளில் மத்திய அரசு சொந்தமாக தேர்வை நடத்தியது. இந்த அமைப்பு முறையானது சுமுகமாகவும் இருந்தது.
மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்:
ஆனால், தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் முறையானது, மேலும், தற்போதைய அமைப்பு பெரும் ஊழலுக்கு வழிவகுத்தது. இது பணம் செலுத்தக்கூடிய பணக்காரர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது, அதே நேரத்தில் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.