அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தின் அதிமுக ஒன்றிய செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஓபிஎஸ்.,யின் தீவிர ஆதரவாளரான அவர், ஏன் நீக்கப்பட்டார்? அரசு நிலங்களை தன் வசமும், தன் உறவினர்கள் வசமாக்கி பட்டா போட்டு கூறுபோட்டது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. என்ன நடந்தது....? இதோ முழுவிபரம்!
கடந்த அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் சுமார் 100ஏக்கர் அரசு நிலங்களை முறைகேடாக பட்டா மாறுதல் செய்ததாக புகார். நில அளவையர், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் பணியிடை நீக்கம். அபகரிக்கப்பட்ட அரசு நிலம் மீட்பு... நடந்தது என்ன? இப்படி அதிகாரிகள் மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தவறில், அதிமுக பிரமுகம் சிக்கியது எப்படி?
கூட்டு மோசடி அம்பலம்!
வருவாய்த் துறையில் நிலம் தொடர்பான அடிப்படை ஆவணமாக விளங்குவது 'அ' பதிவேடு ஆகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த ஆவணத்தில் திருத்தம் மேற்கொள்ள கோட்டாட்சியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த அனுமதியை பயன்படுத்தி தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் குறு வட்ட நில அளவியர் தொடங்கி, வட்டாட்சியர்கள், கோட்டாட்சியர்கள் ஆகியோரது கூட்டு மோசடியால் பல ஏக்கர் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த பெரியகுளம் சார் - ஆட்சியர் ரிஷப்-பிற்கு, மாவட்ட ஆட்சியர் கே.வி.முரளிதரன் உத்தரவிட்டார்.
100 ஏக்கர் நிலம் மோசடி!
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், கெங்குவார்பட்டி கிராமத்தில் 5ஏக்கர் அரசு நிலத்தை முறைகேடான ஆவணங்கள் தயாரித்து தனது மனைவியின் பெயருக்கு பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணிபுரிந்த சக்திவேல் என்பவர் பெயர் மாற்றம் செய்து பட்டா மாறுதல் பெற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து நடைபெற்ற சார் - ஆட்சியரின் விசாரணையில், தாமரைக்குளம், வடவீரநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 100ஏக்கர் நிலங்கள் தனிநபர்களால் இது போல மோசடி செய்து அபகரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
4 முக்கிய அதிகாரிகள் சஸ்பெண்ட்!
இவற்றில் மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு, ஆயுதப்படை மைதானம், பல்துறை அரசு அலுவலகங்கள் மற்றும் காவலர் குடியிருப்பு என பல்வேறு அரசு அலுவலகங்கள் நிறைந்த வடவீர நாயக்கன்பட்டி கிராமத்தில் தான், அதிக அளவிலான நில அபகரிப்பு நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம் நடைபெற்றதாக சொல்லப்படும் கால கட்டத்தில் பணிபுரிந்த வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் என 4பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். அதன் படி முன்னாள் பெரியகுளம் வட்டாட்சியரும், தற்போது போடிநாயக்கனூர் தாலுகா சமூக நல பாதுகாப்பு வட்டாட்சியராக உள்ள இரத்தினமாலா, தற்போதைய பெரியகுளம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், போடி தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் மோகன்ராம் ஆண்டிபட்டி தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சஞ்சீவ் காந்தி ஆகிய 4பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அன்னப்பிரகாஷ் செய்த அட்டகாசம்!
இயற்கை வளமிக்க தேனி மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களை கடந்த ஆட்சியில், அதிமுகவினர் சூறையாடியிருக்கின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இச்சம்பவம். அதன் ஒரு பகுதியாக தான் பெரியகுளம் அதிமுக (மேற்கு) ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், அவரது உறவினர்கள் பெயரில் அரசு நிலங்களை முறைகேடாக ஆவணங்கள் தயாரித்து பட்டா பெற்றுள்ளார். அவ்வாறு அபகரிக்கப்பட்ட நிலத்தில் கனிமவளத்துறையினரின் ஒத்துழைப்போடு மண் அள்ளி விற்பனை செய்துள்ளனர்.மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கான பிளாட்களாக மாற்றி உள்ளனர். இந்த முறைகேடுகளில் குறு வட்டு நில அளவையர் தொடங்கி, வட்டாட்சியர், கோட்டாட்சியர் வரை தொடர்பிருப்பதாக தெரிகிறது. எனவே அரசு நிலங்களை அபகரித்து இயற்கை வளங்களை சூறையாடியவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தி தவறு செய்திருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அரசுக்கு பலதரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
கறாராக நிற்கும் கலெக்டர்!
இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கூறுகையில், ‛‛புகார் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு நிலங்களை மோசடியாக பட்டா மாறுதல் செய்வதற்கு உறுதுணையாக இருந்த வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் என 4பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் வேறு யாருக்கெல்லாம் இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கிறது என்று விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது தாமரைக்குளம், தேவதானப்பட்டி மற்றும் வடவீர நாயக்கன் பட்டி ஆகிய பகுதிகளில் மோசடியாக பட்டா மாறுதல் பெறப்பட்ட 90ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அரசு நிலமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த சர்வே எண்களில் புதிதாக பத்திரப்பதிவு மேற்கொள்ளாதவாறு பதிவுத்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கைவிட்ட அதிமுக!
இந்த விவகாரத்தில் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் கையும் களவுமாக சிக்கியிருப்பதால் அவரை கட்சியிலிருந்து வேறு வழியின்றி நீக்கியுள்ளனர். அதிமுக கைவிட்ட நிலையில், அவர் மீதான சட்டரீதியான அடுத்த நடவடிக்கைகள் தீவிரம் அடைந்து வருகிறது.