வழக்கமாக, மகனுக்கு அப்பா சிபாரிசு செய்வதை பார்த்துள்ளோம். ஆனால், தனது மகனின் சிபாரிசு மூலம், மு.க. அழகிரி முழு நேர அரசியல் களத்திற்குள் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மோசமான உடல்நிலையில் இருந்து மீண்டுவந்த துரை தயாநிதி


சமீபத்தில், மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி, மிக மோசமான உடல்நிலை பாதிப்புக்குள்ளானது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இதனால், அழகிரி மட்டுமல்லாமல், அவரது தம்பியான ஸ்டாலினும் மிகவும் மன வேதனைக்கு உள்ளாகியிருந்தனர். மருத்துவமனைக்கே சென்ற மு.க. ஸ்டாலின், அழகிரிக்கு ஆறுதலும், தைரியமும் சொல்லி அவரை தேற்றினார். அதோடு நிறுத்தாமல், நீண்ட நாள் ஐசியு-வில் இருந்த துரை, மிகவும் மோசமான நிலைமைக்குப் போய், ஒருவழியாக தேறிய நிலையில், மேல் சிகிச்சைக்காக அவரை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார் ஸ்டாலின்.


துரை தயாநிதியை மீட்க உதவிய நெப்போலியன்


திமுகவில் மிகவும் முக்கியத்துவம் பெற்றவராக விளங்கியதோடு, எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய அமைச்சர் என பதவிகளை விகத்தவர் நடிகர் நெப்போலியன். இவர், அரசியல் மற்றும் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, தன் மகனுக்காக அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டது அனைவரும் அறிந்ததே.


இந்த சூழலில், துரை தயாநிதியின் உடல்நிலை குறித்தும், அவர் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக வருவது பற்றியும் நெப்போலியனிடம் அழகிரிய பேசியுள்ளார். அதை கேட்ட உடனேயே, நீங்கள் கவலைப்படாதீர்கள், அவரை நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். நெப்போலின். இதையடுத்து, அமெரிக்காவிற்கு துரையை அழைத்துச் சென்ற அழகிரி, அங்கேயே தங்கி மகனை பார்த்துக்கொண்டார். 6 மாதங்களில் மகனின் உடல்நிலை நன்றாக தேறியது. இதையடுத்து, சமீபத்தி சென்னை வந்த அழகிரி, ஸ்டாலினின் அழைப்பின் பேரில், அவரை சென்று சந்தித்தார்.


அழகிரிக்கு மகனால் கிடைத்த அரசியல் ரீ என்ட்ரி


முன்னதாக, துரை தயாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக, மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரிடம் பேசியுள்ளார். அப்போது, தான் நன்றாக குணமாகிவிட்டதாக தெரிவித்த துரை தயாநிதி, தன் தந்தை அழகிரி குறித்தே ஸ்டாலினிடம் அதிகம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, அரசியலில் ஈடுபடாததால், தந்தை அழகிரி தனித்து விடப்பட்டதாக உணர்வதாக, துரை ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார். மேலும், தான் நன்றாக குணமாகிவிட்டதால், தன் தந்தையை அழைத்து பேசுமாறும், அவரது தனிமையை போக்குமாறும் ஸ்டாலினிடம் அவர் கூறியுள்ளார். அதன் விளைவாகவே, ஸ்டாலின் அழகிரியை அழைத்து பேசியதாக கூறப்படுகிறது.


இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளதால், அழகிரி முழு நேர அரசியலுக்கு வருகிறாரா என் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2026-ல் சட்டமன்ற தேர்தல் வேறு வருவதால், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலம் வாய்ந்தவராக கருதப்படும் அழகிரி, திமுகவிற்கு பலம் சேர்ப்பார் என கருதப்படுவதால், ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.