முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுக செய்யும் தவறுகளை மறைக்கவே ஆளுநரை வில்லனாக்க முயற்சிக்கின்றார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். மாநில சட்ட ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழலில் முதலமைச்சர் அதில் கவனம் செலுத்தாமல், ஆளுநர் மீது புகார் கூறுவது, சரியானது அல்ல என கூறியுள்ளார்.
மேலும் அவர், ”ஆளுநர் குறித்து தரக்குறைவாக ஒருமையில் பேசும் திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள்தான் தமிழ்நாட்டில் உள்ளனர். ரவி என்ற ஒருமை சொல்லாடலை திமுகவினர் உருவாக்கியுள்ளனர். இது அவருடைய மாண்பிற்கு எதிரானது. மாநில அரசு அளித்த உரையில் இருந்த உண்மைக்கு மாறான கருத்துக்களை ஆளுநர் படிக்கவில்லை. 2024 பாராளுமன்ற தேர்தல் தோல்வி பயத்தில் தான் முதலமைச்சர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். மற்றபடி குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை”.
அதேபோல், “சிதம்பரம் கோவில் விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை நலவாரியம் அளித்த அறிக்கையைத் தான் ஆளுநர் கூறினார். இங்கு விவாதம் தேசிய குழந்தைகள் உரிமை நலவாரியம் அளித்த அறிக்கையா அல்லது மாநில அரசு கூறுவதா என்பது தான். ஜி.யு.போப் திருக்குறளை மொழி பெயர்த்ததில் சில கருத்துகளை ஆளுநர் முன்வைக்கிறார். அதனை அவருடைய கருத்துச் சுதந்திரமாகத் தான் பார்க்க வேண்டும். நானே பல இடங்களில் கூறியுள்ளேன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என. ஜி.யு. போப் மொழிபெயர்த்தது குறித்து அவருடைய கருத்துதானே தவிர, அதில் அரசியல் இல்லை. மேலும், ஆளுநர் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் தவறு. ஆளுநர் நிகழ்ச்சிகளுக்குச் செல்வார், தமிழ்நாடு குறித்து பேசுவார், கலாச்சாரம் குறித்து பேசுவார். எதுவும் பேசக்கூடாது என்பது எவ்வகையில் நியாயம்? முதலமைச்சர் எழுதியுள்ள கடிதம் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறதே தவிர தமிழ்நாட்டின் உண்மை நிலைமையை பிரதிபலிப்பதாக அந்த கடிதம் இல்லை”என கூறினார்.