பணம், செல்வாக்கு, பின்புலம் மட்டுமே வேட்பாளரை தீர்மானிக்கும் தமிழ்நாடு அரசியல் களத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது கேரள தேர்தல் களம். பட்டதாரிகள், நடுத்தரவாசிகள், இளைஞர்கள் என வாய்ப்புகளை அள்ளித்தருவதில் கேரளா என்றுமே தனித்துவத்துடன் விளங்குகிறது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நிரூபிக்கப்பட்ட அந்த நடைமுறை தற்போது பொதுத் தேர்தலிலும் தொடர்கிறது. கடந்த முறை எளிய குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்ணை மேயர் வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களமிறக்கியதைப் போல இம்முறை காங்கிரஸ் கட்சி வறுமையான குடும்ப பின்னணியில் இருந்து இளம்பெண் ஒருவரை வேட்பாளராக களமிறக்கியுள்ளது.




 காயங்குளம் சட்டமன்ற தொதகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள அரிதா பாபு தான் இந்த முறை கேரள அரசியல் களத்தில் ‛டாப் டாக்’. யார் இந்த அரிதா பாபு? 27 வயதில் இளம் வேட்பாளரான இவரை காங்கிரஸ் தேர்வு செய்தது எப்படி? கால்நடைகளை வளர்த்து, பால் விற்பனை செய்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் அரிதா பாபு. அவரது தந்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் இளம் வயதிலிருந்தே காங்கிரஸ் போராட்டங்களில் பங்கேற்று அப்பகுதி மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்தி வந்துள்ளார். 




21 வயதில் ஆலப்புழா மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக  வெற்றி பெற்ற அரிதா பாபு, 2015ல் கேரளாவின் இளம் வயது உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதியாக ஊடக வெளிச்சம் பெற்றார். அத்தொகுதியை மீட்க எளிய குடும்பத்தை சேர்ந்த அரிதாவை தேர்வு செய்த காங்கிரஸ் கட்சி, ‛எளிய குடும்பத்திலிருந்து மாதிரி வேட்பாளர்’ என பெருமையுடன் அவரை  சட்டமன்ற வேட்பாளராக அறிவித்துள்ளது.  இளைஞர் காங்கிரஸ் தாலுகா பொதுச் செயலாளராக உள்ள அரிதா போட்டியிடும் தொகுதி கடந்த 15 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சியின் வசம் உள்ளது.




 அதை இம்முறை அரிதா கைப்பற்றுவார் என்கிற நம்பிக்கையில் அவரை களமிறக்கியுள்ளது காங்கிரஸ். தொடர்ந்து பால் விற்பனை, பிரசாரம் என இரு பணிகளிலும் மும்முரம் காட்டிக் கொண்டிருக்கும் அரிதா பாபு, ‛காயங்குளத்தில் தனி தாலுகா, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வெளிப்படை தன்மை கொண்டு வருவது, சுற்றுலா வளர்ச்சி போன்ற கோரிக்கைகளை முன் வைத்து தனது பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார். அரிதாவை ஏற்குமா காயங்குளம்? பொறுத்திருந்து பார்க்கலாம்.