தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம், மிக அதிகரித்துள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, அரசுப் பள்ளிகள் இழந்த பெருமையை நிச்சயம் மீட்டெடுக்கும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழகத்தில்கடந்த நான்கரை ஆண்டுகளில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம், மிக அதிகரித்துள்ளது, மத்திய கல்வித்துறை அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
அதிகரிக்க இடைநிற்றல் சதவீதம்
கடந்த 2021–22 ஆம் ஆண்டிலிருந்து, தற்போது மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், தொடக்கப் பள்ளி வகுப்புகளில் 0% ல் இருந்து 2.7% ஆகவும், நடுநிலை வகுப்புகளில் 0% ல் இருந்து 2.8% ஆகவும், உயர்நிலை வகுப்புகளில் 4.47% ல் இருந்து 8.5% ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக,அரசுப் பள்ளிகளில், வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் என, அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காமல், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை முழுமையாக சிதைத்ததே, இதற்கு முக்கியக் காரணம் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
உலகத் தரம் வாய்ந்த கல்வியை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல், தனது கட்சிக்காரர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என இந்த அரசு கொண்டு வந்த வினோத கல்விக் கொள்கை, ஒரு தோல்வியடைந்த கல்விக் கொள்கை என்பது நிரூபணமாகியிருக்கிறது. ஏழை, எளிய குழந்தைகளின் எதிர்காலத்தைக் கொஞ்சம் கூடக் கருத்தில் கொள்ளாமல், கல்வியை வியாபாரமாக்கி, நடுத்தர குடும்பத்தினர் மீது, பெரும் கடன் சுமையைத் திணித்திருக்கிறது என்றார்.
பெருமையை மீட்டெடுப்போம்:
வரும் தேர்தல் முடிந்த பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, அரசுப் பள்ளிகள் இழந்த பெருமையை நிச்சயம் மீட்டெடுக்கும் என அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்திருந்தார்.
