பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி கிளம்பும் முன்பு விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “எந்த நகரங்கள் தூய்மையாக இருக்கிறதோ, அங்கு சுற்றுலாத்துறை வளர்ந்திருக்கிறது. மத்திய அரசு தூய்மைக்கு முன்னுரிமை அளித்து வருவதால், தமிழக அரசு  போட்டி போடாமல் இந்தியா திட்டமாக நினைத்து அதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பொய்யை பரப்புவது திமுகதான்.


அதிமுக கூட்டணி முறிவு குறித்து பாஜக தேசிய தலைமை என்னிடம் எந்த அறிக்கையும் கேட்கவில்லை. என்னிடம் கேட்டால் பதில் சொல்வேன். இது கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. யாரிடமும் அறிக்கை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 


நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏழு, எட்டு மாதங்கள் இருக்கிறது. இதையடுத்து கட்சியை இன்னும் பலப்படுத்தும் பணியில் கவனம் செலுத்துகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் தன்மை எப்படி இருக்கும் என்பதை சம்பந்தப்பட்ட நேரத்தில் தேசிய தலைமை முடிவு செய்யும். அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு எதுவும் ஏற்படாது. 2024 தேர்தலுக்கு முழு உறுதியுடன் இருக்கிறோம். தினமும் மக்களை சந்திக்கிறோம். 2024 மக்களவை  தேர்தலில் வலுவான இடத்தை பிடிப்போம். மக்களவை தேர்தலில்  எத்தனை இடங்களில் கிடைக்கும் என்ற எண்ணிக்கையை சொல்ல விரும்பவில்லை. தேர்தல் நேரத்தில் இது சொல்லப்படும்.


மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது. அரசியலில் பதவிக்காக வந்தவன் கிடையாது. எனக்கு என தனி உலகம் இருக்கின்றது. அதில் நான் வாழ்கின்றேன். அட்ஜெஸ்மென்ட் பாலிடிக்ஸ் அண்ணாமலையிடம் கிடையாது, என்னால் யாருக்காகவும் மாற முடியாது. திமுகவை புகழ்பாடவே கம்யூனிஸ்ட் கட்சி இருக்கின்றது. கே.பாலகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு கரும்புள்ளி. கம்யூனிஸ்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரியாக இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.


அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று சொன்னதாக முன்னாள் அமைச்சர் கே.சி கருப்பண்ணன் சொன்ன கருத்துக்கு, ”இன்னொரு முன்னாள் அமைச்சர் பதில் சொல்லி இருக்கிறார். அவர்களுக்குள் மாற்றி மாற்றி பதிலடி கொடுத்து கொள்கின்றனர். தமிழக பா.ஜ.க தவறான பாதையில் செல்கின்றது என யாராவது சொன்னால், அதற்கு நேர் எதிரான திசையில் கட்சி பயணிக்கும்” எனத் தெரிவித்தார்.


தொடர்ந்து, அதிமுகவினரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்து பேசிய அவர், “தமிழக பாஜக மீது அனைவருக்கும் கோபமாக இருக்கின்றனர். ஒரே ஒரு தேர்தல் பாஜகவிற்கு வந்தால் 25 சதவீத வாக்கு சதவீதத்தை காட்டி, தமிழகத்தின் அரசியல் தலைகீழாக மாற்றிவிடும். இந்தியாவில் பாஜக மட்டும் தான் சுத்தமான கட்சியாக இருக்கின்றது”எனத் தெரிவித்தார்.


பாஜக மாநில தலைவராக இல்லாமல் இருந்தால், கட்சியில் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு ஆவேசமான அண்ணாமலை, பத்திரிகையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மரபை தாண்டினால் யாராக இருந்தாலும் விட மாட்டேன். இன்னிக்கும் நான் விவசாயியாக இருக்கிறேன். நான் முழு நேர அரசியல்வாதி கிடையாது” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “டெல்லியில் என்னை சேர் போட்டு உட்கார வைத்து கேள்வி கேட்கப் போகிறார்களா? டெல்லி சென்றாலும் இப்படியே தான், போகாவிட்டாலும் இப்படித்தான் இருப்பேன். என்னை எல்லாரும் எதிர்க்கிறீர்கள். அதுதான் என் வளர்ச்சிக்கு காரணம். இதை நான் மாற்றி கொள்ள விரும்பவில்லை. அரசியல் பல கோணங்கள் இருக்கும்.


நான் நேர்மையாக இருக்கின்றேன். டெல்லி செல்வது வழக்கமான பணிக்காக, நடைபயணம் குறித்தும், நடை பயணத்தில் பங்கேற்க இருப்பவர்கள் குறித்தும் ஆலோசிப்பதற்காகவே செல்கிறேன். இது இரு வாரங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. அதிமுகவை நான் ஏன் விமர்சிக்க வேண்டும்? கருத்து சொல்ல வேண்டும்? நான் நடைபயணத்தில் கவனம் செலுத்துகிறேன். கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் கருத்து சொல்வார்கள். தனித்துப் போட்டி என்பதற்குள் செல்ல விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் நிறைய கட்சிகள் இருக்கின்றது. கூட்டணிக்கான காலமும் நேரமும் இருக்கிறது.  ஜெயிப்பதற்காகத்தான் போட்டியிடுவோம். தமிழகத்தில் நிறைய இடங்களில் ஜெயிப்போம். அதனால் தான் பிற கட்சிகள் பயந்து போய் இருக்கின்றன. இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவோம். தமிழகத்தின் பல இடங்களில் ஜெயிப்போம்” எனத் தெரிவித்தார்.