”ராமர் கோயில் பற்றி ஆன்மிகம் தெரிந்த மாதிரி பேசும் இபிஎஸ்க்கு தெரியாது” - அண்ணாமலை

"முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜகவை கண்டால் பயம். பாஜக இப்படி, அப்படி என பேசுவது தான் அவர் வேலை. 2024 தேர்தல் முடிவு வந்ததும் முதல்வர் கருத்து பற்றி பேசிக் கொள்ளலாம்"

Continues below advertisement

கோவை வெள்ளலூர் பகுதியில் பாஜக சார்பில் ரேக்ளா போட்டிகள் நடத்தப்பட்டது. 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில், 250 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரிசுகளை வழங்கினார். பின்னர் அண்ணாமலை முன்னிலையில் கொமதேக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கலைஞர் கருணாநிதி பெயரில் ஏறு தழுவுதல் மைதானம் திறந்து வைத்த போது, முதலமைச்சர் ஸ்டாலின் நிறைய பொய்களை பேசியுள்ளார். ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடக்க காரணம் மோடி தான். 2006 ம் ஆண்டு ரேக்ளா போட்டிக்கு தான் முதலில் தடை விதிக்கப்பட்டது. ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டை காட்டு மிரண்டி விளையாட்டு என்றார்.

Continues below advertisement

காங்கிரஸ் ஆட்சியில் காட்சிபடுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளையையும் சேர்த்தார்கள். அதனால் ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்டவை தடை செய்யப்பட்டது. இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்தவர் ஸ்டாலின். காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையில் இருந்து பாஜக அரசு காளையை நீக்கியது. மத்திய பாஜக அரசு ஆதரவால் தான் ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை மீதான தடை நீங்கியது. தடைக்கு காரணமாக இருந்த கலைஞர் கருணாநிதி பெயரை ஏறு தழுவுதல் மைதானத்திற்கு வைக்க கூடாது.

முரண்பாடு இல்லாதவர்கள் ஒரு கூட்டணியில் இருக்கிறார்கள். ஆனால் இண்டி கூட்டணியில் மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியானாவில் முரண்பாடுகள் உள்ளது. இண்டி கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பிரச்சினையை நிதிஷ்குமார் வெளியேற காரணம். இண்டி கூட்டணி ஆரம்பிக்கவும், மற்ற கட்சிகளை சேர்க்கவும் காரணம் நிதிஷ்குமார் தான். அவரே வெளியே வந்துள்ளார். இது பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்பதை காட்டுகிறது. மோடி எதிர்ப்பு என்ற ஒரே அஜெண்டாவை தவிர வேறு எந்த கொள்கையும் இண்டி கூட்டணிக்கு இல்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 3. 50 இலட்சம் பேருக்கு அரசு வேலை தருவோம் என்றார்கள். ஆனால் இரண்டரை ஆண்டுகளில்  10 ஆயிரம் 321 பேருக்கு தான் வேலை தந்துள்ளார்கள்.


கிராம பகுதிகளில் 50 சதவீத காவலர்கள் பற்றாக்குறை உள்ளது. கிராம பகுதிகளில் வழிப்பறி, கொலைகள் அதிகமாக நடக்கிறது. பல்லடத்தில் பத்திரிகையாளர் மீதான தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது. முதலமைச்சர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு செயல் இழந்துள்ளது. கேரள ஆளுநர் தர்ணா செய்த பிறகு ஜெட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆளுநர் எது பேசினாலும் குற்றம் கண்டு பிடிக்கிறார்கள். தமிழிசை சௌந்தரராஜனிடம் வம்படி சண்டை செய்கிறார்கள். அரசியலமைப்பு சட்டப்படி அரசியல் அதிகாரம் முதல்வருக்கு தான் உள்ளது. விதிமீறலை தான் கவர்னர் பார்க்கிறார். ஆளுநர் உடன் மோதல் போக்கை கடைபிடிப்பது நல்ல அரசியல் அல்ல. பினராயி விஜயன், ஸ்டாலின் ஆகியோர் ஆளுநர் குறித்து பயன்படுத்தும் வார்த்தைகள் ஏற்புடையது அல்ல.

வேங்கைவயல், திமுக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் பெண்ணுக்கு நடந்த சித்ரவதை, இரட்டை டம்ளர் பிரச்சனை, தமிழகத்தில் அதிக வன்கொடுமை வழக்குகள் பதிவாவது பற்றி திருமாவளவன் பேசவில்லை. மற்றவர்கள் தாக்கி பேசப்பேச நாம் வளர்கிறோம் என அர்த்தம். திருமாவளவன் என்னை ஆட்டு குட்டி என்றது எனக்கு பெருமை தான். மத்திய அமைச்சரவையில் 76 அமைச்சர்களில் 12 அமைச்சர் பட்டியலினத்தவர். அதுவே தமிழகத்தில் 35 பேரில் 3 பேர் மட்டுமே பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். அதனால் ஸ்டாலினை கண்டிக்கிறோம் என திருமாவளவன் தீர்மானம் போட்டிருக்க வேண்டும். திருமாவளவன் போட்ட தீர்மானங்கள் எல்லாம் பச்சை பொய். 2, 3 சீட்டுக்காக நாடகம் போட்டுள்ளார். சமூகநீதி பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை. அவர் ஒரு அரசியல் வியாபாரி.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜகவை கண்டால் பயம். பாஜக இப்படி, அப்படி என பேசுவது தான் அவர் வேலை. களத்தில் வியர்வையை சிந்தி நாங்கள் வேலை செய்கிறோம். கள நிலவரம் என்ன என எங்களுக்கு தெரியும். 2024 தேர்தல் முடிவு வந்ததும் முதல்வர் கருத்து பற்றி பேசிக் கொள்ளலாம். எங்கள் கட்சிக்கு யாரும் அறிவுரை சொல்ல வேண்டாம். பங்காளி, பகையாளி என்பவர்கள் ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்க்கட்டும். அதிமுகவினர் அண்ணாமலையை மாற்ற சொல்லி டெல்லிக்கு சென்று நாடகம் நடத்தட்டும். திமுக தீய சக்தியை அழிக்கும் குறிக்கோளோடு வேலை செய்கிறேன். இந்தியாவில் அதிக வெளிநாடு பயணம் செல்லும் முதல்வர் ஸ்டாலின் தான். அவர் எதற்காக வெளிநாடு செல்கிறார் என்ற உண்மையை சொல்ல வேண்டும். விஜய் உட்பட யாரும் அரசியலுக்கு வரலாம். பல கோவில் இருந்தாலும், அயோத்தி குழந்தை ராமர் கோவில் சிறப்பு வாய்ந்தது. இது ஆன்மிகம் பற்றி தெரிந்தவர்களுக்கு புரியும். ஆன்மிகம் தெரிந்த மாதிரி பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு புரியாது” எனத் தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola