Annamalai On Vijay: பரந்தூர் விமான நிலையத்திற்கான சரியான இடத்தை விஜய் சொல்வாரா என? அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பரந்தூரில் விஜய் பேசியது என்ன?
பரந்தூரில் விமான நிலையம் அமைய எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களையும் கடந்து, போராடி வரும் விவசாயிகளை தவெக தலைவர் விஜய் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, “பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிக்காக எடுக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ள இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். வளர்ச்சி பணிகளுக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால், விவசாயிகள் பாதிக்கும் வகையிலான வளர்ச்சி திட்டங்கள் வேண்டாம். பாதிப்புகள் குறைவாக இருக்கும் இடத்தில் விமான நிலையத்தை அமைக்கலாம். ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நாடகங்களை பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள். உங்களுடைய வசதிக்காக அவர்களோடு இருப்பது, இல்லாமல் இருப்பதும், நாடகம் ஆடுவதையும், ஆடமலிருப்பதையும், அதுசரி நம்பும்படியாக நாடகமாடுவதில் தான் நீங்கள் கில்லாடியாச்சே” என திமுக மற்றும் பாஜக என மாநில மற்றும் மத்திய ஆளுங்கட்சிகளை சாடியிருந்தார்.
”இடத்தை சொல்லுங்கள் விஜய்” - அண்ணாமலை
விஜயின் பேச்சு தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, “விவசாய நிலங்கள், பறவைகள் சரணாலயங்கள் இருப்பதாக பரந்தூர் மக்கள் சொல்லும் கருத்துகள் நியாயமானவைதான். மாநில அரசு இந்த இடத்தை தேர்வு செய்தபோது இதனை கவனித்திருக்க வேண்டும். அதிமுக, திமுக இரு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும்போது புதிய விமான நிலையத்தை அமைக்க பரந்தூரை பரிந்துரைத்துள்ளன. மாநில அரசு கொடுத்த பட்டியலில் இடத்தை தேர்வு செய்தது மட்டுமே மத்திய அரசின் வேலை.
எனவே பிரச்சினை இருக்கிறது என்றால் சகோதரர் விஜய் ஆக்கப்பூர்வமான யோசனை தெரிவிக்க வேண்டும். பெங்களூரு விரைவுச் சாலை அருகிலேயே பரந்தூர் வருகிறது. வேறு இடம் உங்களுக்கு தெரிந்தால் அதனை சொல்ல வேண்டும். எல்லாத்தையும் எதிர்க்கக் கூடிய மாநிலமாக தமிழகம் மாறிவிட்டால், எவ்வாறு ஒரு டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற முடியும்” என அண்ணமலை பேசியுள்ளார். இதேபோன்று, சரியான இடத்தை நீங்களே சொல்லுங்க என, பல திமுகவினரும் இணையத்தில் பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நெட்டிசன்கள் கேள்வி:
ஜப்பான் போன்ற மேலைநாடுகளில் எல்லாம் வளர்ச்சி திட்டங்கள் என கூறி இயற்கை வளங்களை அழிப்பதில்லை. ஒற்றை மரத்தை கூட காக்க வேண்டும் என கருதி, அதனை அப்படியே விட்டுவிட்டு சாலை அமைப்பது, கட்டிடங்களை எழுப்புவது போன்ற பல திட்டங்களை பார்க்க முடிகிறது. அப்படி இருக்கையில், ”விவசாய நிலங்கள், பறவைகள் சரணாலயங்கள் இருப்பதாக தெரிந்தும், மாநில அரசு பரிந்துரைத்த ஒரே காரணத்தால் மத்திய அரசு அந்த இடத்தில் திட்டத்தை செயல்படுத்தலாமா?” என அண்ணாமலைக்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். அப்படியானால், இயற்கை வளங்களை காப்பதில் மீது மத்திய அரசுக்கு பங்கில்லையா எனவும் சாடி வருகின்றனர்.
தவெகவினர் சாடல்:
பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் ஒரு வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவதே அரசின் வேலை. அதில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுவது தான் எதிர்க்கட்சிகளின் வேலை. அப்படி செய்கையில், ”குறை சொல்பவர்களே இடத்தையும் சொல்லுங்கள் என கேள்வி கேட்டால், பின்பு அரசு நிர்வாகம் என ஒன்று இருந்து என்ன பலன்” என தவெகவினர் கேள்வி எழுப்புகின்றனர். அதோடு விஜய் பேசுகையில் குறிப்பிட்டதை போன்று, ”தங்களது வசதிக்காக பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் திமுக மற்றும் பாஜக தற்போது கூட்டு சேர்ந்து இருப்பதாகவும்” தவெகவினர் சாடி வருகின்றனர்.